புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான ஆரம்பகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் கீழ், பாடசாலைகளின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களை அறிவூட்டும் விசேட நிகழ்ச்சி இன்று (19) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைபெறவுள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா பணியாளர்களுக்கு அடிப்படைப் புரிதலை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும்.
இதற்கு மேலதிகமாக, புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் விரிவான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டிய சட்ட ஆவணங்கள் மற்றும் விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் இதன்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து கற்றல் உதவி உபகரணங்களும் இணையவழி (Online) மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




