அரச சேவையில் தற்போது பணிகளை முன்னெடுத்துச் செல்வது மிகவும் சிரமமான நிலைமையில் இருப்பதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
நேற்று (19) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரச ஊழியர்களிடையே பல்வேறு சம்பளப் பிரச்சினைகள் காணப்படுவதுடன், பணியில் இருப்பவர்களும் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக பொறியியல் துறையிலும் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், இப்பிரச்சினைகளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மாத்திரம் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
எனவே, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் தமது முன்மொழிவுகளை சம்பள ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து தொழிற்சங்கங்களிடமும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதன் ஊடாகவே அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும் விஞ்ஞானபூர்வமானதுமான தீர்வைக் காண முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




