தற்போது சில தரப்பினர் மதங்களை அவமதித்து, சமூகத்தில் குழப்பங்களையும் தூண்டுதல்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
தனது காவி உடையைக் கழற்றி நேருக்கு நேர் மோத வருமாறும், தன்னைத் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப் போவதாகவும் சமூக ஊடகங்கள் ஊடாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக சில பொதுமக்களும் பிக்குகளும் தனது பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தியதாகத் தெரிவித்த தேரர், விகாராதிபதி பதவியிலிருந்து நீக்கி, தாக்குதல் நடத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப் போவதாக வெளிப்படையாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வரலாற்றுச் சிறப்புமிக்க தூபிகளின் ஆசீர்வாதமும், கண்ணுக்குப் புலப்படாத சக்திகளும் தர்மத்தில் ஈடுபடும் பிக்குகளைப் பாதுகாப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.




