இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்றும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த மொஹமட் பசாலின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
“ரத்னதீப ஜன்ம் பூமி” – எமது தாய்நாடு
“ரத்னதீப ஜன்ம் பூமி” என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போது, நான் பிறந்த, எனது பிள்ளைகள் பிறந்த, நாம் அனைவரும் நேசிக்கும் இந்த நாடே எனது நினைவுக்கு வருகிறது.
ஏனைய இலங்கையர்களைப் போலவே, இலங்கையை எமது தாய்நாடு என்று பெருமையுடன் கூறுவதற்கு இந்நாட்டின் முஸ்லிம் மக்களுக்கும் முழுமையான உரிமை உள்ளது. அதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை.
இலங்கை முஸ்லிமாகிய நான், இந்நாட்டின் பௌத்த பாரம்பரியத்தை மனப்பூர்வமாக மதிக்கிறேன். இலங்கையை பௌத்த நாடு என்று குறிப்பிடுவதில் நாம் கோபமடைய வேண்டிய எந்தக் காரணமும் இல்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பௌத்த மதத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ள இந்நாட்டின் கலாசாரப் பாரம்பரியத்தில் ஓர் அங்கமாக இருப்பது எனக்கும் பெருமையாகும். அந்தப் பாரம்பரியத்தை மதிப்பதும், இந்தத் தாய்நாட்டில் எனக்குள்ள உரிமையைப் பெருமையுடன் வெளிப்படுத்துவதும் எனக்கு இயல்பான விடயங்களாகும்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நபரிடம் நான் நேரடியாக ஒன்றைக் கூற விரும்புகிறேன்.
உங்களுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளை, நீங்கள் தெரிவு செய்த வார்த்தைகளுக்கான பொறுப்பும் உங்களையே சாரும்.
தனது மதத்திற்கு மற்றவர்கள் மரியாதை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஒருவர், ஏனையோர் புனிதமாகக் கருதும் விடயங்களுக்கும் அதே மரியாதையை வழங்க வேண்டும்.
நீங்கள் வெளியிட்ட அவமரியாதையான கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நீங்கள் பேசியது உங்களுக்காக மட்டுமே. எனக்காகவோ அல்லது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவோ பேசுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
உங்களுடைய வார்த்தைகளால் மனம் புண்பட்டவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரும் அளவுக்கு பணிவுடன் நடந்துகொள்ளுங்கள்.
எனது மதத்தின் பெயரால் எனது சக நாட்டவர்களை அவமதிக்க யாராவது நினைத்தால், எனது பதில் தெளிவானது. எனது பெயரைப் பயன்படுத்தி ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது!
அரசியலமைப்பின் 9, 10 மற்றும் 12ஆம் உறுப்புரைகள்
என்னைப் பொறுத்தவரையில், இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்தை அதன் 9, 10 மற்றும் 12ஆம் உறுப்புரைகளை ஒன்றாக வாசிக்கும்போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
- 9ஆம் உறுப்புரை: பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான பொறுப்பை அரசுக்கு வழங்குகிறது. அதேவேளை, ஏனைய மதங்களின் மத சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துகிறது.
- 10ஆம் உறுப்புரை: ஒவ்வொருவரினதும் சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சி மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது.
- 12ஆம் உறுப்புரை: சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும், சட்டத்தின் சமமான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.
இந்த சமநிலை நிலைத்திருக்க வேண்டுமாயின், இந்த உறுப்புரைகளின் உண்மையான அர்த்தம் நாம் ஒருவருக்கொருவர் வழங்கும் மரியாதையிலும் வெளிப்பட வேண்டும்.
பௌத்த சகோதர சகோதரிகளிடம் வேண்டுகோள்
இந்தக் கருத்தினால் மனம் புண்பட்ட எனது பௌத்த சகோதர சகோதரிகளே, உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
உங்களிடம் நான் மரியாதையுடன் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
ஒருவரின் வார்த்தைகளை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கான காரணமாகப் பயன்படுத்த வேண்டாம்.
உங்களுடைய திருமண நிகழ்வுகளுக்கும் இறுதிச் சடங்குகளுக்கும் வருகை தந்த, உங்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டபோது அருகில் நின்ற முஸ்லிம் அயலவர்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
உங்களுக்கும் அறிமுகமில்லாத ஒருவரின் வார்த்தைகளுக்காக, பல ஆண்டுகளாக உங்களுக்கிடையில் கட்டியெழுப்பப்பட்ட உறவை ஏன் சிதைக்க வேண்டும்?
இனியும் பிரிவினை வேண்டாம்!
இப்போது போதும். பிரிவினையினால் இந்த நாடு ஏற்கனவே பெரும் விலையைக் கொடுத்துவிட்டது.
எமது பிள்ளைகள் ஒன்றாக வாழக் கற்றுக்கொள்வது, இன்று நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைப் பார்த்துத்தான்.
எனது பிள்ளையும் உங்கள் பிள்ளையும் அருகருகே நின்று “ரத்னதீப ஜன்ம் பூமி” என்று பாடும்போது, இந்த நாடு தமக்குச் சொந்தமானதா என்ற சிறிய சந்தேகம்கூட அவர்களது மனதில் எழக்கூடாது.
இது நம் அனைவருக்கும் சொந்தமான தாய்நாடு!




