web log free
April 25, 2024

அமானா வங்கிக்கு புதிய தலைவர்

அலி அஸ்கர் (அஸ்கி) அக்பரலி அமானா வங்கியின் பணிப்பாளர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியின் ஸ்தாபக தலைவரான ஒஸ்மான் காசிம் தனது கடமைகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியொன்றில் பணிப்பாளர் சபையில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர் ஆகக்கூடியது 9 வருடங்கள் வரை மாத்திரமே பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கலாம் என்ற இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், இலங்கையில் இஸ்லாமிய வங்கியியல் துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டுள்ள ஒஸ்மான் காசிம், அமானா வங்கியில் பணிப்பாளர் சபையில் ஒன்பது வருட காலமாக பணியாற்றியிருந்ததைத் தொடர்ந்து, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வங்கியிலிருந்து ஓய்வு பெற்றாலும்;, வங்கியின் முதல் 10 பங்குதாரர்களில் ஒருவராக அவர் தொடர்ந்து திகழ்கிறார்.

அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்திலிருந்து பிரேரிக்கப்பட்ட பணிப்பாளராக, அஸ்கி அக்பரலி அமானா வங்கியுடன் 2020 ஜுலை மாதத்தில் இணைந்தார். வங்கியில் சட்டபூர்வ 9 வருடங்கள் பணிப்பாளராக கடமையாற்றி, ஒய்வு பெற்ற தயீப் அக்பரலியின் பொறுப்புகளை இவர் ஏற்றிருந்தார். 

உலகளாவிய ரீதியில் தேயிலை ஏற்றுமதிக்காகப் புகழ்பெற்றுள்ள, இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றான அக்பர் பிரதர்ஸ் (பிரைவட்) லிமிடெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் அக்பர் குரூப் நிறுவனத்தின் உற்பத்தி, சொத்துக்கள் விருத்தி, ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல், சுகாதாரப் பராமரிப்பு, வலுப் பிறப்பாக்கல், பொதியிடல் மற்றும் அச்சிடல், சரக்குக் கையாளல் மற்றும் சூழல் சேவைகள் போன்ற பிரிவுகளில் இயங்கும் துணை நிறுவனங்களில் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் Renewgen (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளராக திகழ்வதுடன், Windforce (Pvt) Ltd, Hermitage Resorts (Pvt) Ltd, Uthurumaafaru Holding (Pvt) Ltd Maldives, Lhaviyani Holdings (Pvt) Ltd மற்றும் Cocoon Investments (Pvt) Ltd Maldives ஆகியவற்றின் தலைவராகவும் Alumex PLC இன் பணிப்பாளராகவும் அஸ்கி அக்பரலி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.