web log free
April 19, 2024

இலக்கத்தை மாற்றாமல் வலையமைப்பை மாற்றும் வசதி

தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் தாம் விரும்பிய வலையமைப்பிற்கு மாறும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.

தொலைபேசி இலக்க இலகுவாக்கம் (number portability) எனும் குறித்த வசதியின் மூலம், ஒரே கையடக்க மற்றும் நிலையான தொலைபேசி இலக்கத்தில் இருந்தவாறு, வெவ்வேறு வலையமைப்புகளுக்கு மாற முடிகின்றது. இவ்வசதி  பல்வேறு நாடுகளிலும் நடைமுறையில் உள்ள நிலையில், இலங்கையிலும் அதனை அறிமுகப்படுத்தவுள்ளதாக, TRC  அறிவித்துள்ளது.

இச்செயன்முறையானது, இந்தியா, மலேசியா, ஓமான் போன்ற நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இது பாவனையாளர்களுக்கு பல்வேறு வழிகளிலும் வசதியானது என்பதோடு, இதன் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவை தொடர்பிலான போட்டித் தன்மையையும் சேவையின் தரத்தையும் உரிய முறையில் பேணி, வாடிக்கையாளர்களை தொடர்ந்தும் தங்களது வலையமைப்பில் வைத்துக் கொள்வதற்கு சேவை வழங்குனர்களிடையே போட்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் தாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக, டயலொக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் தாங்கள் அதனை அறிமுகப்படுத்துமாறு 2008 இல் கோரியதாக, டயலொக் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முடிவுகளுக்கமைய தொடர்ந்தும் செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விற்றர் தளத்தில் தெரிவித்துள்ள அந்நிறுவனம், தொலைபேசி இலக்க இலகுவாக்க திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முதற் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, இதன் மூலம் பாவனையாளர்கள், தம்மிடம் ஏற்கனவே உள்ள இலக்கத்தை மாற்றாது, தாம் விரும்பும் வலையமைப்பிற்கு மாற முடியும் என அறிவித்துள்ளது.