இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகிய மாருதி சுஸுகி நிறுவனம் எதிர் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் தனது பல்வேறு கார் மாடல்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக விலை ஏற்ற நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம். கடந்த ஜனவரியிலும் கார் மாடல்களின் விலையை உயர்த்தி இருந்தது.
கார் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்திருப்பதால் இந்த விலை ஏற்றத்தை செய்ய வேண்டியுள்ளதாக மாருதி நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி ஆட்டோ தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிலில் இழப்பைச் சந்தித்தன. அதேநேரத்தில் உற்பத்திக்கான செலவும் உயர்ந்துள்ளது.
அதனை ஈடுகட்டவே மஹிந்திரா, டாடா மற்றும் மாருதி நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கின்றார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.
இதேவேளையில், மாருதி நிறுவனம் தற்போது அறிவித்துள்ள விலை அதிகரிப்பு எவ்வளவு என்பதை தெரிவிக்காமல் உள்ளதுடன், கடந்த ஜனவரியில் மாருதி நிறுவனத்தின் சில மாடல்கள் 34,000 இந்திய ரூபாய் வரை உயர்த்தப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.