29 செப்டெம்பர் 2021: வணிக வங்கிச் சேவையில் முன்னோடியான DFCC வங்கி, அனைத்து DFCC கடன் அட்டைதாரர்களுக்கும், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மருந்தகம் வழங்கும் சேவைகளை இன்னும் கூடுதலான அளவில் இலகுவாகவும், நியாயமான விலைகளிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக Quickmed.lk உடன் கைகோர்த்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.
DFCC வங்கி இப்போது 2021 செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் இணையவழி மருந்தகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ரூபா 6,500 தொகைக்கு மேற்பட்ட அனைத்து சுகாதாரப் பராமரிப்பு பரிவர்த்தனைகளுக்கும் வட்டியின்றிய, 12 மாத கால இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டத்தை வழங்குகின்றது. Quickmed.lk இல் கொள்வனவு செய்கின்ற அனைத்து தயாரிப்புகளுக்கும், DFCC அட்டைதாரர்கள் தமது அட்டையை உபயோகிக்கின்ற ஒவ்வொரு தடவையும், அவர்களுடைய விலைப்பட்டியலின் மொத்த தொகையில் 15% பிரத்தியேக தள்ளுபடியும், அத்துடன் சேமிப்பினை ஊக்குவிக்க இடமளிக்கும் வகையில் 1% பண மீளளிப்பு சலுகையும் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் மற்றுமொரு சிறப்பு அனுகூலமாகும். 2021 செப்டெம்பர் 30 வரை பெறப்படுகின்ற புதிய அட்டைகளுக்கான கடனட்டை இணைப்புக் கட்டணம் மற்றும் முதலாவது ஆண்டுக்கான வருடாந்த கட்டணம் ஆகிய இரண்டையும் தள்ளுபடி செய்வதன் மூலம் இந்த முயற்சிக்கு மேலும் ஊக்கமளிக்க வங்கி முடிவு செய்துள்ளது. வங்கியின் இணையத்தளம் மூலம் இணைய வழியில் DFCC கடனட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
இலங்கையின் முன்னணி சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான இணைய வழி மருந்தகங்களில் ஒன்றான Quickmed.lk, அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பாதுகாப்பாகவும் நேர்த்தியாகவும் நேரடியாக வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஆபத்திற்கு முகங்கொடுக்கும் வாய்ப்பினைக் குறைத்து, தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே பாதுகாப்பான வழியில், தமது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தேவைகளை சௌகரியமாகப் பெற்றுக்கொள்வதற்கு இடமளித்து அதன் உச்ச சேவையை நாடளாவியரீதியில் வழங்குவதற்கு வழிகோலிய சில நிறுவனங்களில் ஒன்றாக இந்த மருந்தகம் திகழ்வதுடன், வாடிக்கையாளரின் திருப்தி மற்றும் சௌகரியத்தையும் உறுதி செய்கின்றது.
உயர் ரக, உயர் தர ஆரோக்கிய தயாரிப்புக்களை வாங்கும் போது அட்டைதாரர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைப்பதே இந்த கூட்டாண்மையின் பிரதான நோக்கமாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சலுகைத் திட்டங்கள் அவற்றின் கட்டுபடியை அதிகரிக்கச் செய்வதுடன், அட்டைதாரர்கள் தங்கள் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் தயாரிப்புகளைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் தமது பணப்புழக்கத்தை எளிதாக நிர்வகிக்கவும் வழிவகுக்கிறது. DFCC வங்கி அட்டைதாரர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்க, இணையத்தின் மூலமாக Quickmed.lk விற்பனை மையத்திற்குச் செல்வதன் மூலம் இந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இப்புதிய கூட்டாண்மை குறித்து, DFCC வங்கியின் துணைத் தலைமை அதிகாரியும்/அட்டை மையத்திற்கான தலைமை அதிகாரியுமான டென்வர் லூயிஸ் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “DFCC வங்கியின் கடனட்டை வாடிக்கையாளர்களுக்கு பன்முகப்பட்ட நன்மைகளைக் கொண்டு வரும் வகையில், Quickmed.lk உடனான எங்கள் புதிய கூட்டாண்மையை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இது அட்டைதாரர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உயர் ரக ஆரோக்கிய தயாரிப்புகளை குறைந்த செலவில் வாங்குவதற்கு இடமளிப்பதுடன், அதன் மூலமாக அவர்களின் நிதிச் சுமையையும் தணிவிக்கின்றது. ஒரு முன்னணி வர்த்தக வங்கி என்ற ரீதியில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கட்டுபடியாகக் கிடைக்கச் செய்கின்றமை என்பது ஒரு முக்கியமான மதிப்புச் சிறப்பாகும். இந்த கூட்டாண்மை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இலகு தவணைக் கொடுப்பனவு மற்றும் பண மீளளிப்புத் திட்டங்கள் புத்தாக்கமான மற்றும் பயனுள்ள நிதித் தீர்வுகள் மூலம் தொடர்ந்து மதிப்பை சேர்க்கும் எங்கள் அர்ப்பணிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்,” என்று குறிப்பிட்டார்.
Quickmed.lk இன் தலைமை நிர்வாக அதிகாரியான சுஜீவ சமரவீர அவர்கள் இது தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்துகையில், “DFCC வங்கியுடனான எமது புதிய கூட்டாண்மை, சமூகத்தில் அனைவருக்கும் மிகச் சிறந்த சுகாதாரத் தீர்வுகளை மிகவும் திறம்பட வழங்க எமக்கு இடமளிக்கிறது. அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டே, தாங்கள் விரும்பும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்புகளை மிகவும் கட்டுபடியான வழியில் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கான எங்கள் இலக்கை அடைய இந்த கூட்டாண்மை வழிவகுக்கிறது. தற்போது பரவி வருகின்ற தொற்றுநோய் காரணமாக தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், இக்கூட்டாண்மை மூலம் கிடைக்கப்பெறுகின்ற கட்டுபடியாகும் தன்மை மற்றும் நிதியியல் உள்ளடக்கம் ஆகியவை இந்த சோதனை நிறைந்த காலகட்டங்களில் சமூகத்தின் அனைத்து வகுப்புகளுக்கும் பயனளிக்கும்,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி மீண்டும் ஒரு முறை நீண்ட கால மதிப்பினை உருவாக்கும் பயணத்தின் அடுத்த படியை குறிக்கும் இந்த கூட்டாண்மை மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தொடர்ச்சியான பெறுமானச் சேர்ப்பினை உறுதி செய்யும் கூட்டாண்மைகளை கட்டியெழுப்புவதற்கு அயராது உழைத்து வருகிறது.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.