வீட்டுக்குள் பிரவேசித்து குளியலறையில் இருந்த பெண்ணொருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக அம்பாறை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக் காவலர் என அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று (25) தெரிவித்தார்.
இந்த பொலிஸ் சார்ஜன்ட் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் கடமையாற்றுவதுடன், அக்கம்பக்கத்திலுள்ள காணிக்குள் இரகசியமாக பிரவேசித்து, குறித்த காணியில் உள்ள வீட்டின் குளியலறையில் பெண் இருந்த காட்சியை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைப்பதற்கு கோரப்பட்ட காணியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த காணி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஏற்ற காணி என ஆளுநர் திருப்தி வெளியிட்டார்.
மேலும் மைதானத்தை அண்மித்து பொழுது போக்கு மையம் அமைக்கும் திட்டம் உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
பெற்றோருடன் காலி முகத்திடலை பார்வையிட வந்த 7 வயது சிறுமியை கடத்த முயன்ற 33 வயது நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை பெற்றோர் உதவி கோரி கூச்சலிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உட புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (24) காலை பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பல புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான ரயில் கட்டுப்பாட்டு அறையின் முயற்சிகளுக்கு எதிராக ரயில் சாரதிகள் குழுவொன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று ஆரம்பித்திருந்தது.
இதன் காரணமாக நேற்று (23) சுமார் 21 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில் திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபோலகே தெரிவித்தார்.
அத்துடன் இன்று காலை இயக்கப்படவிருந்த அலுவலக ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் இயக்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் அடுத்த வாரம் இராஜகிரிய பிரதேசத்தில் திறக்கப்படவுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அரசியல் இயக்கமொன்றை ஸ்தாபிக்கும் இந்தப் பணியில் லன்சாவுக்கு மேலதிகமாக, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் ஈடுபட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுமார் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த புதிய பிரச்சாரத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தி அடுத்த அரசியல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் மேற்படி பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.
வவுனியாவில் வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் , வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களுக்கு தீ வைத்துள்ளனர்.
சம்பவத்தில் பாத்திமா சம்மா சப்தீர் (வயது 21) எனும் குடும்ப பெண் உயிரிழந்துள்ளதுடன் , 2 வயது குழந்தை , 07 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் , 19 - 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள் மற்றும் 42 வயது மற்றும் 36 வயதுடைய இரு ஆண்கள் என 09 பேர் தீக்காயங்கள் மற்றும் , வாள் வெட்டு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ஒருவருக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் ஆகும். அதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் குடும்பமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த காடையர்கள் வீட்டின் உரிமையாளர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.
பின்னர் வீட்டில் இருந்த குழந்தைகள், சிறுவர்கள் , பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டு வாள் வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு விட்டு , அவர்களுக்கும் , வீட்டிற்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் வாள் வெட்டு மற்றும் தீக்காயங்களுக்கு உள்ளான 21 வயதான இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய 09 பேரையும் அயலவர்கள் மீட்டு , வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹடாட் சர்வோஸ், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல, பொருளாதார தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என்று கூறுகிறார்.
இது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும் அவர் கூறினார்.
இதன் காரணமாக வெளிநாட்டுக் கடன் பாரியளவில் குவிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 மற்றும் 2022 க்கு இடையில், இலங்கையில் வறுமை 13.1 வீதத்தில் இருந்து 25 வீதமாக இரட்டிப்பாகியுள்ளது என்றும், இந்த வருட இறுதிக்குள் (2023) வறுமை மேலும் 2.4 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் ஃபாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பலர் வறுமையின் அதிர்ச்சியை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹகுரன்கெட்ட ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதுடைய 8 மாத பெண் குழந்தையும் காணாமல் போயுள்ளனர்.
குறித்த பெண்ணின் தாயார் நேற்று முன்தினம் (20) காணாமல் போயுள்ளதாக ஹகுரன்கெட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபரும் அவரது சிறிய மகளும் காணாமல் போன தினத்தன்று லங்காம பேரூந்து ஒன்றில் ஹங்குரன்கெத்த, ரிக்கிலகஸ்கட பகுதிக்கு வந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் ஹகுரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு அந்த பெண்ணும் அவரது மகளும் பஸ்சில் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹகுரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், நேற்று (21ஆம் திகதி) காலை வீட்டுக்கு அருகிலுள்ள புதரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.