web log free
December 22, 2024

மாகாணங்களுக்கு அதிகாரம் பிரித்து வழங்கப்பட வேண்டும் - ஜனாதிபதி

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தமக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை எனவும், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு அழைக்கப்பட்டது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கு மட்டுமே உள்ள தன்னால் தனியாக அந்தப் பணிகளை மேற்கொள்ள முடியாது எனவும், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து எம்பிக்களும் ஒன்றிணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாணசபைகள் பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை பேண நினைத்தால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

மாகாண சபைகளுக்குச் சொந்தமான பல விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளதால் அந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளில் அடிமட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டிற்கான கொள்கைகளை மத்திய அரசாங்கம் வகுக்க வேண்டுமெனவும், அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன். சுமந்திரன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, கெவிது குமாரதுங்க, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, ஜி.எல். பீரிஸ், அத்துரலியே ரதன தேரர், வீரசுமண வீரசிங்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, சி.வி. விக்னேஸ்வரன், லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd