web log free
March 29, 2024

‘கோபம் தலைக்கேறியது: ஓடியவர்களை கொத்தினேன்’

குப்பை பெட்டி அன்றுக்காலை, பிரதான வீதியில் இழுத்து வீசப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் என்னை ஏசினர், கடையால் குப்பைகள் குவிகின்றன என ஏசினர். அதுதொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக, பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்த வேளையில்,  வீட்டுக்கு பொலிஸார் வந்துள்ளனர் என தொலைபேசியில் எனக்குத் தெரிவித்தனர்.

முறைப்பாட்டை வழங்குவதை நிறுத்திவிட்டு, வீட்டுக்குத் திரும்பினேன். நான் வருவதற்குள் பொலிஸார் சென்றுவிட்டனர். வீதியில் குப்பைகளை வீசியமைக்காக, நீதிமன்றத்தின் ஊடாக 18 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும் என பொலிஸார், தெரிவித்துவிட்டு சென்றிருந்தனர் என வீட்டார் தெரிவித்தனர்.

அவ்வாறு வாக்குமூலம் அளித்திருந்தார் இரட்டை படுகொலையின் சந்தேகநபரான , வென்னப்புவ வைக்கால் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

தனது தலைக்கேறிய கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும்  நீதிமன்றத்தில் வாக்குமூலமளித்துள்ளார்.

வென்னப்புவையில், 19 வயது மாணவியையும் அவருடைய தம்பியான 8 வயதான மாணவனையும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வெட்டிக்கொலைச் செய்துவிட்டு, பொலிஸ் சரணடைந்த நபர், நீதிமன்றத்தில் வாக்குமூலமளித்தார்.

மாரவில நீதவான் நீதிமன்ற நீதவான் கெமிந்த பெரேராவின் முன்னிலையில், வாக்குமூலமளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அன்றையதினம், நீதிமன்றத்தின் சகல நடவடிக்கைகளும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன. சட்டத்தரணிகள் சிலர், பொலிஸ் அதிகாரிகள் சிலர், நீதிமன்றத்தில் கடமையிலிருந்த அதிகாரிகள் சிலர் மட்டுமே இருந்தனர். நீதிமன்றத்தின் மேல் மாடிக்கான பிரதான கதவு இழுத்து மூடப்பட்டது.

சந்தேகநபர், பிரதிவாதி கூண்டில் ஏறியிருந்தார்.

நீதவான்: இந்த வாக்குமூலத்தை யாருடையாவது அழுத்தத்தின் காரணமாக நீங்கள் வழங்குகின்றீர்களா?

சந்தேகநபர்: இல்லை சுவாமினி, எனது விருப்பத்தில் வழங்குகின்றேன்.

நீதவான்: பொலிஸார் அழுதம் கொடுத்தனரா?.உன்னை, மீண்டும் பொலிஸாரிடம் நான், ஒப்படைக்கமாட்டேன்.

சந்தேகநபர்: இல்லை சுவாமினி

நீதவான்: அப்படியாயின், கூறவேண்டியதை, உரத்த குரலில், சத்தமாக கூறவும்.

நீதிமன்றத்தின் அந்த அறையே அமைதியாக இருக்க, உரத்த குரலில், தன்னுடைய வாக்குமூலத்தை சந்தேகநபர் அளித்தார்.

சந்தேகநபர்:

எனது மனைவிக்கு சொந்தமான காணியை விற்றே, இந்த சிற்றுண்டிசாலையை ஆரம்பித்தேன். அருகில், வசித்தவர்களிமிருந்து தனக்கு ஒவ்வொருநாளும் தொந்தரவுகளும், அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டன.

எந்தநேரத்தில் கழற்றி செல்லக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்ட கண்டெயினர் பெட்டியிலேயே என்னுடைய வியாபாரத்தை நான் நடத்தினேன். அதற்கான அனுமதியை யாரிடமும் பெற்றுக்கொள்வில்லை. அப்படி அனுமதியை பெறவேண்டும் என தனக்கு தெரியாது. அதற்கு அனுமதியை பெறவேண்டும் என பின்னர் தெரிந்துகொண்டேன்.

எனினும், அதற்கு முன்னரே, எனக்கு எதிராக வென்னப்புவ பிரதேச சபையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. தேனீர் கடையை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த வியாபாரத்தை, மனைவியின் காணியை விற்றே, 25 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்பித்தேன்.

அந்த வியாபாரத்தை நிறுத்துவது கஷ்டமானது. கடந்த சில மாதங்களாக என்னுடைய அம்மா, மனைவியிடமிருந்து எனக்கு பெருமளவில் மன அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் எனக்கு அதிர்ச்சியை கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

எனது கண்டெயினரிலிருந்து வெளியேறும் நீரை, பீலியின் ஊடாக செல்லும் வகையில் வடிவமைத்திருந்தேன். என்றாலும், அது போதாமல் இருந்தது. என்னுடைய வியாபாரம் பக்கத்து வீட்டுகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாக, பிரதேச சபையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து வந்த அதிகாரி வபார்வையிட்டார். அவரும் எனக்கு அழுத்தம் கொடுத்தார்.

எனக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென கேட்டேன். வென்னப்புவ பிரதேச சபையின் தலைவருக்கு தெரிவித்து, அந்த வியாபாரத்தை தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன். அதற்கு பிரதேச சபையின் தலைவரும் அனுமதியளித்திருந்தார். வாய்மூலமாக அனுமதியளித்திருந்தார். எழுத்துமூலமான அனுமதி கிடைக்கவில்லை.

அவருடைய அனுமதி தொடர்பிலான அவருடைய குரல் பதிவு, என்னுடைய கையடக்க தொலைபேசியில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. என்னை இன்று (27) விசாரணைக்கு வருமாறு, பிரதேச சபையின் தலைவர் அழைத்திருந்தார்.

கடைக்கு முன்பாக இருந்த குப்பை கூடை, 26 ஆம் திகதி இரவு நடுவீதியில் இழுத்து வீசப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி, குப்பை கூடையை எத்தி வீசியெறிந்தார். அந்த சம்பவம் கூட என்னுடைய கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. படங்களும் இருக்கின்றன.

இன்றைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்த நான், எனக்கு பாதுகாப்பு இல்லை என முறைப்பாடு செய்திருந்தேன்.

குப்பைக்கூடையை இழுத்து வீசிய பிரச்சினையே 27ஆம் திகதி இருந்தது. 119க்கு அழைப்பை எடுத்தேன். பொலிஸ் நிலையத்தின், தொலைபேசிக்கும் அழைப்பை எடுத்து முறைப்பாடை செய்திருந்தேன்.

என்னுடைய அம்மா, எனக்கு கோல் எடுத்துகூறினார், பொலிஸார் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் என்று, 5 நிமிடங்கள் நான் வருவதாக அம்மாவிடம் கூறிவிட்டு, தொலைப்பேசி அழைப்பை துண்டித்துவிட்டு, வீட்டை நோக்கி விரைந்தேன்.

வீதியில் குப்பைகளை வீசியமைக்காக, நீதிமன்றத்தின் ஊடாக 18 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும் என பொலிஸார், தெரிவித்துவிட்டு சென்றிருந்தனர் என அம்மா கூறினார். வீட்டாரும் அதையே கூறினர்.

நான், 25 இலட்சம் ரூபாய் செலவழித்து, நடத்திக்கொண்டிருக்கும் சிற்றுண்டிச்சாலையை மாற்றவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டவர்கள், பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு வந்திக்கும் பிரியங்கியும் வீட்டின் உரிமையாளர் ஹேமந்தவின் மனைவி நில்மினியும் ஆவார் என உணர்ந்தேன்.

அவ்விருவரின் தவறான கண்ணோட்டத்திலேயே எனக்கு எதிராக சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதாகவே நான் உணர்ந்தேன்.

நான், பழிவாங்க நினைத்தேன். அந்த நேரத்தில் எனக்குள் ஏற்பட்ட கோபத்தினால், என்னுடைய வீட்டிலிருந்த பட்டாக்கத்தியை எடுத்துக்கொண்டு, அவர்களின் வீட்டுக்குள் சென்றேன். மனிதர்களை படுகொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு செல்லவில்லை.

எனினும், அந்த வீட்டுக்குள் செல்லும் போது, என்னுடைய கோபத்தை என்னால் அடக்கமுடியவில்லை. கோபம் தலைக்கு ஏறியிருந்தது. ஹேமந்தவையே பழிவாங்க நினைத்தேன். என்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவர்களின் பிள்ளைகள் எனது முன்னிலையில் வந்தமையால், கோபத்தை கட்டுப்படுத்த முடியாமலே போய்விட்டது. நான், கொத்தி சாய்த்தேன். யாரை கொத்தினேன், எதற்காக கொத்தினேன் என எனக்குத் தெரியாது.

பட்டாக்கத்தியை எடுத்துக்கொண்டு முன் வீதிக்கு ஓடிவந்தேன். பிரியங்கி, வாடகைக்கு எடுத்திருக்கும் வீட்டுக்குச் சென்று வீட்டின் கதவை உதைத்தேன். அவர் இருக்கின்றாரா? என பார்தேன். அவள் இருக்கவில்லை.

மீண்டும் திரும்பிவந்தேன். அப்போது, அந்த வீட்டின் கேட்டுக்கு அருகில் இருந்த இருவர்கள், என்னிடம் பட்டாக்கத்தியைக் கேட்டனர். பட்டாக்கத்தியை, நான் யாரிடமும் கொடுக்கவில்லை.

நான், மீண்டும் கடைக்கு வந்தேன். அப்போதுதான், என்னுடைய கையிலிருந்த பட்டாக்கத்தியை யாரோ அபகரித்துகொண்டனர்.

150 அல்லது 200க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குழுமியிருந்தனர். பட்டாக்கத்தியை யார் பிடுங்கினர் என்று எனக்கு தெரியாது.

நான், அந்த நேரத்தில் டெனிம் டவுசர் உடுத்தியிருந்தேன். டீ சேர்ட்டும் அதற்கு மேல் சேட்டும் உடுத்தியிருந்தேன். அந்த உடுப்புடன் வந்து, பொலிஸில் சரணடைந்தேன்.

என்னுடைய மனைவியின் கையடக்க தொலைபேசியில் சகல புகைப்படங்களும் சாட்சிகளும் உள்ளன. ஆடைகள், அடையாள அட்டைகள், பெறுமதியான பொருட்கள் வீட்டில் இருக்கின்றன. அவற்றை எடுப்பதற்கு முடியவில்லை. அவற்றை எடுப்பதற்கு, அங்கு செல்லும் எனது மனைவிக்கும், உறவினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என கோரிநிற்கின்றேன்.

நீதவான்: பக்கத்துவீட்டு குழந்தைகளின் இறுதி சடங்குகள் நிறைவடைந்ததன் பின்னர், வீட்டுக்கு உறவினர்கள் போகமுடியும் என்றார்.

அப்போது, வென்னப்புவ பொலிஸ் பொறுப்பதிகாரியை அழைத்த நீதவான், உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். சந்தேகநபருக்காக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

சந்தேகநபரை, செப்டம்பர் 3ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டார்.

Last modified on Saturday, 07 September 2019 12:38