கொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவியதும் பரவியது, பல்வேறான சம்பவங்கள் இடம்பெற்று கொண்டுதான் இருக்கின்றன.
பெருங்காயம், கொத்தமல்லி, வௌ்ளைபூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்துள்ளன.
முகக் கவசத்தின் விலைகளும் அதிகரித்து விட்டன. இன்னும் சில இடங்களில் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுகாதாரம் தொடர்பிலான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. அதில், கைகளை கழுவுதல் பிரதானமானது. ஒரு மணிநேரத்துக்கு ஒருதடவை கைகளை கழுவ வேண்டும். கைகளை கழுவாமல், மூக்கு, வாய்களை தொடக்கூடாது.
இந்நிலையில், கைகளை கழுவிவிட்டு வீட்டுக்குள் நுழையுமாறு கூறிய மனைவியை அவருடைய கணவன் சரமாரியாக தாக்கிய சம்பவமொன்று வாழைச்சேனையில் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை, ஓட்டமாவடி – மீராவோடை பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், வாழைச்சேனா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “ வெளியில் சென்றிருந்த அப்பெண்ணின் கணவன், நேற்றிரவு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். கதவை திறந்த மனைவி, கைகளை கழுவிவிட்டு வீட்டுக்குள் வருமாறு கோரியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.