ரஷ்யாவில், பெண் வாய்க்குள் புகுந்த, கொடிய விஷமுள்ள, 4 அடி பாம்பை, மருத்துவர்கள் லாவகமாக வெளியே எடுத்த, 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில், தஜஸ்தான் மாகாணம், லெவஷி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மிகுந்த களைப்பால், வாய் பிளந்தபடி, அயர்ந்து துாங்கியுள்ளார். அப்போது, பாம்பு ஒன்று, அவர் உடலில் ஊர்ந்து சென்று, வாய்க்குள் புகுந்துள்ளது. துாக்கத்தில் இருந்து விழித்த பெண், தன் வயிற்றில் ஏதோ அசைவதை கண்டு பயந்து, உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றில் ஏதோ நெளிவதை உணர்ந்து, அதை வெளியே எடுக்க வசதியாக, அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து செலுத்தினர்.
பின், தொண்டை வழியே ஒரு குழாயை செருகி, அதை பக்குவமாக வெளியே எடுத்துப் பார்த்த போது, அது, நான்கடி நீளமுள்ள விஷப் பாம்பு என்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். பெண் வாயில் இருந்து பாம்பை வெளியே எடுக்கும், 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், லெவஷி கிராமத்தில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கை என்பதால், 'வீட்டிற்கு வெளியே யாரும் படுக்க வேண்டாம்' என, கிராம நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.