பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள் போராளியான அரவிந்தன் சிவஞானம், தனது மனைவியை தேடி அலைகிறார். அப்போது அவரது வீடு மற்றும் நிலங்களை ராணுவம் அபகரித்துக்கொள்ள, இருக்க இடம் இல்லாமல் சுற்றி அலைபவருக்கு அவருடைய போராளி நண்பர்கள் சிலர் ஆதரவு அளிக்கிறார்கள்.
அவர்களின் உதவியோடு தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்கும் அரவிந்தன், அவர்களோடு சந்தோஷமாக வாழும் நிலையில், அவரை சுற்றி மிகப்பெரிய சதி ஒன்று நடக்க, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இலங்கையில் நடந்த இறுதிப்போருக்குப் பிறகு காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன ஆனது, என்பதே இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள் போராளிகள் சில மாதங்களில் மாயமான முறையில் உயிரிழக்கும் அதிர்ச்சி தகவலை உரக்க சொல்வதோடு, தமிழர்களின் சொத்துக்களையும், நிலங்களையும் அபகரித்துக்கொண்ட இலங்கை ராணுவம், அவர்களை சொந்த நாட்டில் எப்படி அகதிகளாக நடத்துகிறார்கள் என்பதையும் உலகிற்கு சொல்லும் ஒரு முயற்சியாக சினம் கொள் திரைப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம், படத்தின் ஆரம்பத்தில் தமிழர்களின் அவலங்களையும், அவர்களின் ஏக்கங்களையும் தனது பார்வை மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாம் பாதியில், தன்னை சுற்றி நடக்கும் சதியில் இருந்து மீள்வதற்காக தனது போராளி குணத்தை வெளிக்காட்டும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. யாழினி வேடத்தில் நடித்திருக்கும் லீலாவதி, பிரேம், தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக நடித்திருக்கும் தனசெயன், பாலா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஈழத் தமிழர்களை பற்றிய படம் என்றாலே டாக்குமெண்டரி பாணியில் இருக்கும் என்பதை முற்றிலும் மற்றிக்காட்டி முழுக்க முழுக்க ஒரு பரபரப்பான கமர்ஷியல் திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.
மொத்தத்தில், ’சினம் கொள்’ பார்க்கலாம்.