ஆஸ்திரியா நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகினார். இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதி அலெக்சாண்டரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.
ஆஸ்திரியாவில், மைய வலதுசாரி மக்கள் கட்சி, தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி அரசில் மைய வலதுசாரி மக்கள் கட்சியின் செபாஸ்டியன் குர்ஸ் பிரதமராக உள்ளார். தீவிர வலதுசாரி சுதந்திர கட்சியின் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் துணைப்பிரதமராக காணப்பட்டார்.
இந்த நிலையில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதுடன், அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்காக ரஷிய முதலீட்டாளரிடம் பேரம் பேசி உள்ளமை தெரியவந்தது.
அத்துடன், இது தொடர்பாக ரகசியமாக வீடியோ எடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன, துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் பதவி விலகி விட்டார்.
இதனையடுத்து, எதிர்வரும் நாட்களில் ஆஸ்திரியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, திடீர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.