கடலூரில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் நீண்ட கால சிறை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் தன் பள்ளிக்கூடம் அருகே தின்பண்டம் விற்றுவந்த லட்சுமி என்பவருடன் நட்புடன் பழகினார். அவர் அச் சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியதோடு, சிறுமியை தொடர்ந்து மிரட்டி, பல நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.
பிறகு ஆனந்த ராஜ் என்ற நபருடன் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்ட அந்த சிறுமி தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார். இதன் பிறகு, வேறு ஒரு சிறுமியை அழைத்துவந்தால் விட்டுவிடுவதாக இந்த மாணவியிடம் கூறவே, அவரும் மற்றொரு 13 வயது சிறுமியை அழைத்துவந்தார். பிறகு இந்த இரண்டு சிறுமிகளும் பாலியல் கும்பலிடம் விற்கப்பட்டனர்.
இதற்குப் பிறகு கடத்தப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் காவல்துறையை நாடினர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் பாதிரியார் ஒருவரும் சில அரசியல் பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்ததால், பல அமைப்புகள் கடலூரில் போராட்டத்தில் இறங்கின.
உள்ளூர் காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என சிறுமியின் உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இதனால், வழக்கை 2016 ஜூலையில் மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு இந்த வழக்கு தொடர்பாக 30 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பேர் மீது கடத்தல், சிறுமிகளை விற்பனை செய்தது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது, பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதில் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டதால், மீதமுள்ள 17 பேர் மீது வழக்கு நடந்துவந்தது. இந்த வழக்கை கடலூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.