web log free
April 19, 2024

சூடானில் துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போராட்டக்காரர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

சூடானில் 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

3 ஆண்டுகளுக்குள் ஜனநாயக முறையில் புதிய ஆட்சி பொறுப்பேற்பதற்கு வழிவகை செய்யப்படும் என ராணுவம் அறிவித்தது. ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன.

 

இந்த நிலையில், நாட்டில் உடனடியாக மக்களாட்சியை கொண்டு வர வலியுறுத்தி கார்டூம் மற்றும் ஒம்டார்மன் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களை சுற்றி வளைத்த ராணுவவீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடிக்க முயற்சித்தனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது ராணுவவீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் போராட்டக்காரர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் சுமார் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.