வெனிசுலா நாடாளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
எனினும் அவர் கடந்த 10-ந் திகதி உச்ச நீதிமன்றம் முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் நாடாளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ, தான் ஜனாதிபதி ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், தலைநகர் கராக்கசில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக ஜூவான் கெய்டோ நேற்று முன்தினம் காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பாதுகாப்புபடை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
இது எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயல் எனக் கூறி ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.