கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.
காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 3 பேர் மும்பையிலும், மேலும் சிலர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு செல்வதை தடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் மந்திரிகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்கு துணை முதல் மந்திரி பரமேஸ்வர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அதன்பின்னர் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 18ம் திகதி நடைபெற உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சித்த ராமையா அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 18-ம் திகதி விதான் சவுதாவில் உள்ள கூட்ட அரங்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு சித்தராமையா முன்னிலை வகிக்கிறார் என தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை நேற்று வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.