web log free
April 26, 2024

அமேசன் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சி தோல்வி

உலக உயிரினங்களுக்கான ஒட்சிசனில் 20 சதவீதத்தை வழங்கும் புவியின் நுரையீரலுக்கு வந்திருக்கும் பேராபத்து!

அரியவகை விலங்குகள், மரங்கள் அழிகின்றன; புகைமண்டலம் அயல்நாடுகளுக்கும் பரவுவதால், சுகாதாரக் கேடு ஏற்படுமென நாசா அச்சம்!

அமேசன் மழைக்காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.காடுகள் தொடர்ந்து எரிவதால் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைட், பொலிவியா மற்றும் பிரேசில் பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் பரவியுள்ளது.இது அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலகளவில் மிகவும் பிரபலமான காடு அமேசன் காடுகள். இங்கு அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள், அரிய வகை விலங்குகள் உள்ளன.இந்தக் காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது. பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.

கடந்த சில நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அடர்ந்த காடு என்பதாலும் உலகின் மிகப் பெரிய காடு என்பதாலும் இங்கு தீயை அணைப்பது என்பது பிரேசில் நாட்டிற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் தீயை அணைப்பதில் 80 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அமேசன் காட்டுத்தீயால் அங்குள்ள அரிய வகை உயிரினங்கள், மூலிகைச் செடி கொடிகள், மரங்கள், விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன. எனவே காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என பிரேசில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நாசா ஒரு அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது. பொலியா மற்றும் பிரேசில் பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோ​ேனாக்சை் கலந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதை வளிமண்டல் அகச்சிவப்பு ஒலிக் கருவி (Atmospheric Infrared Sounder_AIRS) மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.நாளாக நாளாக கார்பன் மோ​ேனாக்சைட் கலந்துள்ள மேகங்கள் அமேசன் பகுதியின் வடமேற்கில் பரந்து விரிந்து செல்கின்றன. மேலும் இங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கியும் அது பரவியுள்ளது.ஒரு மாதம் ஆனாலும் அந்த கார்பன் மோ​ேனாக்சைட் நீண்ட தூரங்களுக்கு சென்று கொண்டே இருக்கும்.இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.

நாசாவின் இந்த தகவல்கள் அச்சுறுத்தும் அளவில் உள்ளன. இந்த வாயுவை இலேசாக சுவாசிப்பதால் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படும். இதே அதிக அளவு சுவாசித்தால் சுயநினைவு அற்ற நிலைக்கோ அல்லது இறக்கும் நிலைக்கோ செல்லும் ஆபத்துள்ளது. மேலும் இது மாரடைப்பையும் ஏற்படுத்தும் என்பதால் காற்றுடன் கலந்துள்ள இதை சுவாசித்தால் பொலிவியா, பிரேசில் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். அமேசான் காட்டின் தீயை அணைக்க ரூ 160 கோடி கொடுத்து உதவ ஜி7 நாடுகள் தயாராக இருந்த நிலையில் அவை தேவையில்லை என பிரேசில் அரசு உதறித் தள்ளி விட்டது.

தீயை அணைக்கும் பணியில் 80000 வீரர்களுடன் பிரேசில் அரசு அந்நாட்டு இராணுவத்தையும் ஈடுபடுத்தியுள்ளது. விமானம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணிகள் செய்யப்படுகின்றன. ஆயினும் தீயை அணைக்க முடியவில்லை. இந்த நிலையில் தீயை அணைக்க ரூ 160 கோடி நிதியுதவி அளிப்பதாக ஜி7 நாடுகள் அறிவித்தன. ஆனால் அது தேவையில்லை என பிரேசில் தெரிவித்து விட்டது. 

உலகின் மிகப் பெரிய காடான அமேசன் காடு தற்போது மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது. உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தற்போது அங்கு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் அங்கு மொத்தமாக 73000 காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 90% காட்டுத் தீ இன்னும் அணையவில்லை. நாளுக்கு நாள் அமேசன் காட்டில் காட்டுத் தீ புதிதாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.பொதுவாக மழைக் காடுகளில் காட்டுத் தீ ஏற்படுவது அரிது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் வெயில் காரணமாக அமேசான் காடுகளில் காட்டுத் தீ ஏற்பட்டு உடனே அணைவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே காட்டுத் தீ அங்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த காட்டுத் தீ மொத்தமாக பெரியஅளவில் பரவி மொத்த காட்டையே ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளது.அருகாமையில் உள்ள பிரேசில் உள்ளிட்ட நாடுகளில், ஏற்பட்ட காலநிலை மாற்றமும், அதீத விவசாய உரத்துக்கு பயன்படும் மீத்தேன் வாயு உருவாக்கமும் இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கு காரணம் என்கிறார்கள். ஆனால் இதன் தொடக்கம் எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தீ பரவுவதை தடுக்கவும் முடியவில்லை.

இந்த காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட புகை பிரேசில், சாவ் பாவ்லோ, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது. அந்த அளவிற்கு இந்த காட்டுத் தீ பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது.

ஒருமுறை மழைக் காடு ஒன்றில் ஒரு மரம் விழுந்தால் அங்கு மீண்டும் அது முளைக்க பல வருடம் ஆகும். இதனால் மழைக் காடுகளை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயம் ஆகும்.

ஆனால் தற்போது உலகின் மிகப் பெரிய மழைக் காடான அமேசனில் மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டு அதை அழித்து வருகிறது.இதனால் அங்கு பல்லாயிரம் விலங்குகள், பறவைகள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் பல இலட்சம் மரங்கள் இதனால் எரிந்து சாம்பல் ஆகியுள்ளன. உலகில் மொத்தம் உருவாகும் ஒக்சிஜனில் 20% அமேசன் மூலம்தான் உருவாக்கப்படுகிறது. அதேபோல் உலகில் உள்ள விலங்குகளில் 40% விலங்குகள் இந்த காட்டில்தான் இருக்கின்றன. இதனால்தான் இந்த அமேசன் காட்டை 'பூமியின் சுவாசப்பை' என்று குறிப்பிடுகிறார்கள். இதுதான் பூமி வெப்பம் அடைவதை தடுத்து வருகிறது.தற்போது அந்த பூமியின் இருதயம் புகையால் மூடப்பட்டு நெருப்பில் வெந்து கொண்டு இருக்கிறது. இதை தடுக்க முடியாமல் மனித இனமும் கையாலாகாத நிலையில் இருக்கிறது.

அமேசன் காட்டில் இப்போது ஏற்படும் இழப்பை சரி செய்ய பல நூறு வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள்.ஒரு பக்கம் அண்டார்டிக்காவில் பனிக்கட்டி வேகமாக உருகிக் கொண்டு இருக்கிறது.

இன்னொரு பக்கம் தற்போது அமேசான் காடுகள் எரிந்து கொண்டு இருக்கின்றன.

இயற்கையின் இந்த கோபம் உலக அழிவிற்கான அறிகுறியாக இருக்குமோ என்று இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காடுகளுக்கு சொந்தக்காரர்கள் என கூறப்படும் பழங்குடியின காட்டுவாசிகள் காட்டுத்தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.இந்த நிலையில் தீயை அணைக்க 7 மாநிலங்களில் இருந்து இராணுவத்தினரை பிரேசில்ஜனாதிபதி ஜெயிர் போல்சோனாரோ வரவழைத்துள்ளார்.