web log free
April 25, 2024

பிரா அணியாத இயக்கம் ஆரம்பிப்பு

 தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது. தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை பரவி வருகிறது.

தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக அவர் மாறியுள்ளார்.

பிரா அணிவதோ அல்லது அணியாமல் இருப்பதோ ''தனிப்பட்ட சுதந்திரம்'' என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக இந்த இயக்கம் அமைந்துள்ளது.

ஆதரவு தெரிவித்து நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ள போதிலும், அவர், ''தன் மீது கவனத்தை ஈர்க்க'' முயற்சிக்கிறார் என்றும், வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளைத் தூண்டும் செயலில் ஈடுபடுகிறார் என்றும் சமூக ஊடக பயனாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தன் சொந்த விளம்பரத்துக்காக பெண்ணிய பிரசாரத்தை அவர் பயன்படுத்துகிறார் என்றும் சிலர் கருதுகின்றனர். 'பிரா அணிவது உங்களுடைய விருப்பம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிந்து மார்பகங்களை வெளிக்காட்டும் வகையில் அவர் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். அதுபோல அவர் செய்யத் தேவையில்லை,'' என்று ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ''பிரா அணியாததற்காக உங்களை நாங்கள் குற்றம் சொல்லவில்லை.

உங்கள் மார்புக் காம்புகளை மறைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்,'' என்கிறது இன்னொரு பதிவு.''உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்.

இதேபோல பிரா அணியாமல் சர்ச்சுக்கு நீங்கள் செல்ல முடியுமா? உங்கள் சகோதரியின் கணவரை அல்லது உங்கள் கணவருடைய பெற்றோரை இதுபோல சென்று சந்திக்க முடியுமா,'' போன்ற கேள்விகள் எழுவது மட்டுமல்லாது ''ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இதை அசௌகரியமாக உணர்கிறார்கள்,'' என்றும் கருத்துகள் பதிவிடப் பட்டுள்ளன.

மிக சமீபத்தில் ஹிவாசா என்ற மற்றொரு பிரபலமான பாடகியும் #NoBra இயக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.

ஹாங்காங்கில் இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சோலுக்கு திரும்பியபோது உள்ளே பிரா போடாமல் டி-சர்ட் அணிந்து கொண்டு அவர் இறங்கி வந்த புகைப்படங்களும், காணொளிகளும் வைரலாகப் பரவின.

ஆனால், அதன் பிறகு சாமானியப் பெண்கள் மத்தியில் #NoBra இயக்கம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவில் பெண்கள் சுதந்திரத்தில் நாட்டம் காட்டுவது இது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. 2018ல் ''மார்பில் இறுக்கமான உடைகளில் இருந்து விடுதலை,'' என்ற இயக்கம் தீவிரமடைந்தது. பல பெண்கள் நீண்ட தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டு, மேக்-அப் இல்லாமல் வெளியில் சென்றனர். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

தென்கொரியாவில் உண்மைக்கு மாறான அழகு நிலைகளை உருவாக்கிக் கொள்வதற்கு மேக்-அப் மற்றும் தோல் பராமரிப்பில் பெண்கள் அதிக நேரம் செலவிடுதலுக்கு எதிராக இந்த முழக்கம் உருவானது.

தென் கொரியாவில் சமீபத்திய ஆண்டுகளில் ஆணாதிக்க கலாசாரத்துக்கு எதிராகவும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும், கழிவறை மற்றும் பொது இடங்களில் ஆண்கள் 'ரகசிய கேமரா' பொருத்துவதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 2018ல் நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது.

ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை ஒழிக்க வலியுறுத்தி சியோல் நகர தெருக்களில் பத்தாயிரக்கணக்கான பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

பிபிசியிடம் பேசிய தென்கொரிய பெண்களில் சிலர் இருவேறு கருத்துகளில் இருக்கின்றனர். பிரா அணியாமல் செல்வதை அவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் பொது இடத்தில் தங்களால் அப்படி செல்ல முடியுமா என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை.

பார்வையால் பாலியல் வல்லுறவு செய்தல்' என்ற போக்குதான் அவர்களுக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் அளவுக்கு அதிகமாக உற்றுப் பார்ப்பது, அத்துமீறிய செயலாக உள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.

பிரா அணியாமல் செல்வதில் பெண்களின் அனுபவங்கள் குறித்து 'No Brablem' என்ற ஆவணப்படத்தை 2014ல் தயாரித்த குழுவில் இருந்தவர் 28 வயதான ஜியாங் சியாங்-இயுன். பல்கலைக்கழக்தில் இருந்தபோது, பிரா அணிவது இயல்பானது என்று நாம் ஏன் நினைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பத் தொடங்கியபோது, நண்பர்களுடன் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாக சியோங் இயுன் தெரிவித்தார்.

இந்த விஷயத்தை பொதுவெளியில் நிறைய பெண்கள் விவாதிக்கிறார்கள் என்பது நல்லது தான் என்று அவர் நினைத்தாலும், டி-சர்ட்களில் மார்புக் காம்புகளை வெளிக் காட்டிக் கொள்வதை பெரும்பாலான பெண்கள் இன்னும் அவமானத்துக்குரிய செயலாகவே கருதுகிறார்கள் என்று நம்புகிறார்.

`தோள்பட்டையில் பிடிமானம் இல்லாத பிரா அணிந்தால் மார்பகங்கள் தொங்கி, அசிங்கமாகத் தோன்றும் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், அந்த காணொளி எடுத்த பிறகு நான் பிரா அணிவது இல்லை. இப்போது பெரும்பாலான நாட்களில் நான் கோடையில் பிராலெட் அணிகிறேன், குளிர்காலங்களில் பிரா இல்லாமலே செல்கிறேன்,'' என்கிறார் அவர்.

Last modified on Thursday, 05 September 2019 03:00