web log free
April 25, 2024

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல்

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்தான் இப்படி செய்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், பீமாநாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

பீமாநாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், “நாங்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் கட்சி தலைவர்களிடம் கூறி இருக்கிறீர்கள்?” என்று கேட்டதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அது முற்றியபோது, ஆனந்த்சிங்கை கணேசும், பீமாநாயக்கும் சேர்ந்து தாக்கி அவர் படுகாயம் அடைந்து, தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்த் சிங்கை மந்திரி ஜமீர்அகமதுகான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ரெசார்ட்டில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன” என்றார்.

மற்றொரு மந்திரியான டி.கே.சிவக்குமாரோ, “எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன” என்றார்.

இதுகுறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் ஊடகங்களுக்கு கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. தாக்கப்பட்டுள்ளார்.

இது எம்.எல்.ஏ.க்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். பொலிஸார் வழக்கு பதிவு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து சித்தராமையா பதில் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.