web log free
December 04, 2024

மதுரைக்கு இன்று வருகிறார் பிரதமர் மோடி

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

இந்திய ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு மேடைக்கு நரேந்திர மோடி சென்று, பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் 11.15 மணிக்கு, மதுரை வருகிறார்.

விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மோடி கொச்சிக்கு செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விழா நடைபெறும் பகுதியில் பார்வையாளர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுவார்கள்.

காலை 10 மணிக்கு பின்னர் வரும் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி நடைபெறும் மண்டேலாநகர், மதுரை விமான நிலையம் அருகே இருப்பதால் பிரதமர் நிகழ்ச்சி முடியும் வரை 2 மணி நேரம் மதுரையில் விமானம் பறக்க தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd