பிலிப்பைன்ஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
தாக்குதல்காரர்கள் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அபு சயாஃப் (Abu Sayyaf) குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேற்று (ஜனவரி 28) ஏற்பட்ட சம்பவங்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
ஜோலோ தீவின் சூலு வட்டாரத் தேவாலயத்தில் வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முதல் குண்டு வெடித்தது.
சம்பவ இடத்துக்குப் பாதுகாப்புப் படையினர் விரைந்தபோது, இரண்டாவது குண்டு தேவாலயத்திற்கு வெளியே வெடித்தது. அதில் பொதுமக்களுடன், இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தாக்குதல்களுக்குக் காரணமானோர் அழிக்கப்படுவர் என்று பிலிப்பைன்ஸ் அரசாங்கம் சூளுரைத்துள்ளது. இராணுவம் முழு விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடார்ட்டே சம்பவ இடத்தை இன்று நேரில் சென்று பார்வையிடவிருக்கிறார்.