web log free
April 18, 2025

பயந்து ஓடுகையில் மரணமடைந்த நபர்

ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த நபர் சாலையில் போலீசை பார்த்ததும் பயந்து ஓடும்போது மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 2 ஆயிரத்து 547 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதற்கிடையே, கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
இதனால் நாடு முழுவதும் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 
 
ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அத்தியவசிய காரணங்கள் அல்லாமல் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஆனால், சிலர் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளிலும், தெருக்களிலும் கூட்டமாக செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
 
இந்நிலையில், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் லாலாரஜபதிராய் பேட் பகுதியை சேர்ந்தவர் விரஞ்சனியிலூ. 
 
இவர் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று அப்பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். 
 
அப்போது கடை இருந்த பகுதியை நோக்கி போலீசாரின் ரோந்து வாகனம் வந்தது. போலீஸ் வாகனம் வருவதை கண்ட விரஞ்சனியிலூ உள்ளிட்ட பலர் போலீசாரின் பிடியில் சிக்கிவிடக்கூடாது என பயந்து அப்பகுதியை விட்டு வேகமாக ஓடத்தொடங்கினர்.
 
ஆனால், போலீசாரை கண்டதும் வேகமாக ஓடிய விரஞ்சனியிலூக்கு சற்று தூரம் சென்றதுமே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாலையிலேயே நிலைகுலைந்து பரிதாபமாக உயிரிழந்தார். 
 
போலீசாருக்கு பயந்து ஓடியபோது விரஞ்சனியிலூ மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
Last modified on Saturday, 04 April 2020 06:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd