web log free
April 18, 2024

கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி

கொரோனா வைரஸால் கனடா மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள நகர் ஒன்றில், போலீஸ் உடையணிந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் போலீஸ் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். 

போலீஸ் விசாரணையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் 51 வயதான கேப்ரியல் வோர்ட்மேன் என தெரிய வந்துள்ளது. அவரும் உயிரிழந்து விட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

போர்டபிக் என்னும் நகரில் உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை தொடங்கிய இந்த தாக்குதல் ஏறத்தாழ 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்திருக்கிறது.

துப்பாக்கிதாரி போலீஸ் கார் ஒன்றை ஓட்டிவந்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் பல இடங்களில் மக்களை நோக்கி அந்த துப்பாக்கிதாரி சுட்டார். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கொல்லப்பட்டவர்களில், கனடா நாட்டு காவல் துறையில் 23 ஆண்டுகள் பணி செய்த பெண் காவலர் ஹெய்டி ஸ்டீவன்சனும் ஒருவர். 

துப்பாக்கிதாரியிடமிருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு ஹெய்டி தன் உயிரை இழந்ததாக கனடா நாட்டு போலீஸின் நோவா ஸ்காட்டியா பிராந்திய உதவி ஆணையர் லீ பெர்ஜெர்மன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Last modified on Monday, 20 April 2020 07:39