கொரோனா வைரஸ் நம்முடன் நீண்டகாலம் நிலைத்தே இருக்கும்; இது மிக மோசமான விளைவுகளையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பூமியில் இன்னமும் நீண்டகாலம் நிலைத்துதான் இருக்கும். அது மிகவும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று நோய் என்பது தொடக்க நிலையில்தான் இருக்கிறது.
கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீண்டுவிட்டதாக சில நாடுகள் நினைத்து கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று நோய் தாக்கம் தொடர்பாக சர்வதேச அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் சரியான நேரத்தில் ஜனவரி 30-ல் அறிவித்தது. இந்த தொற்று நோயை உலக நாடுகள் எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கொரோனா தொற்று நோய் விவகாரத்தை அமெரிக்கா மிகவும் மோசமாக கையாள்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பதவியை நான் ராஜினாமா செய்யமாட்டேன். கொரோனா தாக்குதல் என்பது உலகின் பல நாடுகளில் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. முன்கூட்டியே பாதிப்புக்குள்ளான நாடுகள் மட்டுமே மீண்டு வந்து கொண்டிருக்கின்றன.
கொரோனா விவகாரத்தில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு வெகு அதிகம். இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறினார்.