web log free
May 02, 2024

பொலிஸ் தாக்குதலில் அமெரிக்காவில் கருப்பின வாலிபர் பலி

அமெரிக்காவில் விசாரணைக்கு வர மறுத்த கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

 
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபரின் கழுத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் நிறவெறியுடன் நடந்து கொண்டதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன.
 
போலீசாரின் அடக்குமுறை மற்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் பரவின. இந்தப் போராட்டங்களில், பெருமளவிலான மக்கள் பேரணியாக திரண்டனர்.
 
இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே கருப்பின வாலிபர் ஒருவர் படுத்து இருக்கிறார் என கடந்த வெள்ளிக்கிழமை இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சென்ற போலீசார் ரேஷார்ட் புரூக்ஸ் (27), என்ற வாலிபரை விசாரணைக்கு அழைத்தனர்.
 
ஆனால் அவர் வர மறுத்ததுடன் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
 
போராட்டக்காரர்கள் சம்பவம் நடந்த பகுதியில் அமைந்த வென்டி உணவகம் மீது தீ வைத்துக் கொளுத்தினர்.  ஒரு மணி நேரத்துக்கு பின்னர்  தீ கட்டுப்படுத்தப்பட்டது.
 
இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், காவல்துறை உயரதிகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். 
Last modified on Monday, 15 June 2020 06:32