முஸ்லிம் கணவருடன் தான் விரும்பிய இடத்துக்கு செல்ல சீக்கிய இளம்பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தானில் நான்கனா சாகிப்பை சேர்ந்தவர் ஜாகித் கவுர். சீக்கிய இளம்பெண்ணான இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அதே பகுதியை சேர்ந்த முகமது ஹசன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.
தங்கள் மகளை கடத்திச்சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டதாக கவுரின் பெற்றோர் புகார் அளித்தனர். அதனால், கவுர் அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கவுரை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி, முகமது ஹசன் லாகூர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கவுர் 18 வயது பூர்த்தி ஆகாதவர் என்று அவருடைய பெற்றோர் தரப்பு வாதிட்டது. ஆனால், கவுருக்கு 19 வயது என்று தேசிய தகவல் பதிவேடு ஆதாரத்தை முகமது ஹசன் தரப்பு காட்டியது.
அதை ஏற்று, கவுர் ‘மைனர்’ அல்ல என்று தீர்ப்பளித்த நீதிபதி சவுத்ரி சேஹ்ரம் சர்வார், கவுர் தன் கணவருடனோ அல்லது தான் விரும்பிய இடத்துக்கோ செல்லலாம் என்று உத்தரவிட்டார்.