web log free
April 26, 2024

300 கார்கள் எரிந்து நாசம்

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 20ஆம் திகதி தொடங்கிய இந்த விமான கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. 4-வது நாளான நேற்று நடந்த விமான கண்காட்சியில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த கண்காட்சியை கண்டுகளிக்க ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். மேலும் இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு விமான சாகசங்களை கண்டு ரசித்தனர்.

விமான கண்காட்சியை காண சென்ற பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக விமானப்படை தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதிகளில் அவர்கள் தங்களின் கார்களை நிறுத்திவிட்டு விமான கண்காட்சியை பார்த்து ரசித்தபடி இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் விமானப்படை தளத்தின் 5-வது நுழைவாயில் அருகே கார்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறி விண்ணை முட்டியது. இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது, வாகன நிறுத்தும் இடத்தில் இருந்த கார்களில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்கள் காரில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையே, அங்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

2 மணிநேரத்துக்கும் மேலாக போராடி வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இருப்பினும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 300-க்கும் அதிகமான கார்கள் தீயில் கருகி நாசமாகின. இதில் 270 கார்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டன.