web log free
March 28, 2024

வங்களாதேஷின் முதல் செய்தி வாசிப்பாளரான திருநங்கை

வங்களாதேஷின் முதல் திருநங்கை வாசிப்பாளரான தாஷ்னுவ அனன் ஷிஷிர் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆனந்த கண்ணீர்விட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வங்களாதேஷின் தனியார் செய்தி தொலைக்காட்சி மூன்று நிமிட செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை அவருக்கு வழங்கினார். சுகாதாரத்துறையில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ள 29 வயது தாஷ்னுவ அனன் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதற்காகப் பல்வேறு நிறுவனங்களில் முயற்சி செய்துள்ளார். ஆனால், தலைநகர் டாக்காவிலுள்ள உள்ள ‘Boishakhi’ என்ற தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு அந்த  வாய்ப்பினை வழங்கி அவரது விருப்பத்தினை நிறைவேற்றியுள்ளது..

இந்நிலையில் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்த தாஷ்னுவ அனன் ஆனந்த கண்ணீர்விட்ட அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து பேசி தாஷ்னுவ அனன், “நான் திருநங்கையாக உணர்ந்தபோது நான் ஆணா பெண்ணா என்ற மனக்குழப்பத்திலே சிக்கித் தவித்தேன். நான் திருநங்கை என வீட்டில் சொன்னபோது என்னிடம் என் அப்பா பேசுவதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டேன். ஆனால் படிப்பை மட்டும் விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். பல கேலிகள், கிண்டல்களை, பாலியல் சீண்டல்கள் எனப்பலவற்றை நான் சந்தித்தபோதும் படிப்பில் கவனமாக இருந்தேன். சமூக புறக்கணிப்பால் சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ள நினைத்திருக்கிறேன். வங்களாதேஷில் மட்டும் சுமார் பத்து லட்சம்  திருநங்கைகள் உள்ளனர். அவர்களில் பலர் வீதிகளில் பிச்சை எடுத்துக்கொண்டும் அல்லது பாலியல் தொழிலில் ஈடுபட்டும் வருகின்றார்கள். அவ்வாறானவர்கள் என்னைப்போல் தன்னம்பிக்கையுடன் வெற்றிபெறத்தான் கடவுள் என்னைப் படைத்திருக்கிறார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.