web log free
April 26, 2024

பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் அனுமதி: இதனால் இந்தியாவில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு

பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா, வங்காளதேசம் ஊடாகப் பயணிக்கும் பிரம்மபுத்ரா நதி பின்னர் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வற்றாத ஜீவநதிகளில் ஒன்றாகிய பிரம்மபுத்ரா நதி  இந்தியாவின் அருச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் வளத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

 இந்நிலையில், அருணாசல பிரதேச எல்லைக்கு அருகே திபெத்தின் மெடோக் கவுண்டியில் பிரம்மபுத்ரா நிதியில் அணை கட்டுவதற்கு சீனா திட்டமிட்டு உள்ளது. அத்துடன் நீர்மின் நிலையம் ஒன்றை கட்டவும் முடிவு செய்துள்ளது. சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டப்படுவது உள்ளிட்ட சீன நாடு முழுவதும் வேகப்படுத்தப்பட வேண்டிய சுமார் 60 வளர்ச்சி திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. பல லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கி உள்ளது.

இந்த அணையின் கட்டுமானப்பணிகள் இவ்வாண்டு தொடங்கும் என திபெத் தன்னாட்சி பகுதிக்கான கம்யூனிஸ்ட் துணைத்தலைவர் சே டல்கா தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பிரம்மபுத்ரா நதி செல்லும் மாநிலங்களில் விவசாயத்தக்கான நீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.