கடந்த 60 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு கொட்டித் தீர்க்கும் மழை மற்றும் புயலுடன்கூடிய வானிலை காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Coffs Harbour, Grafton, Cessnock, Dungog உள்ளிட்ட மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இயற்கைப்பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அம்மாநிலத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் குளங்கள் உடைப்பெடுத்து பெருவெள்ளம் குடிமனைகளுக்குள்ளும் புகுந்துகொண்டது மாத்திரமல்லாமல், இனிவரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், நியூ சவுத் வேல்ஸ் மாநில அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அவசரகால அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
நான்கு மாதகால மழை கடந்த இரண்டு நாட்களில் பெய்திருப்பதால், நியூ சவுத் வேல்ஸின் பிரதான நீர் விநியோகப் பெருந்தேக்கமான Warragamba அணையை மீறி வெள்ளம் பாய்ந்த அதேநேரம், மேலும் பல பெரிய குளங்கள் நிரம்பி வழிகின்றன.
நியூ சவுத் வேல்ஸிற்கும் குயின்ஸ்லாந்துக்கும் இடையிலான பெரு நகரங்கள் மற்றும் பிரதான வீதிகளை வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸின் பல பகுதிகள் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.