பெண்கள் ஆடைக்குறைப்பு செய்வதே பாலியல் குற்றங்களுக்குக் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்த கருத்துக்கு அவரது முன்னாள் மனைவிகளே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையில் பாலியல் அத்துமீறல் குற்றச்சம்பவங்கள் அண்மைக் காலமாக நடந்துவருகின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன் இரண்டு குழந்தைகளுடன் காரில் சென்ற பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இது உலக அளவில் பேசும் பொருளாகியது. இந்நிலையில், இது போன்ற குற்றங்கள் நடப்பதற்கு பெண்கள் குறைவான ஆடைகள் அணிந்து, உடல் அழகை வெளிக்காட்டுவதே காரணம் என பாகிஸ்த்தான் பிரதமர் இம்ரான்கான் ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்துக்கு உலகளாவிய மகளிர் உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரது முன்னாள் மனைவிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குற்றங்களில் ஈடுபடும் ஆண்களே குற்றச் செயல்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என பிரிட்டனில் வசிக்கும் அவரது முன்னாள் மனைவிகள் ஜெமிமா கான் மற்றும் ரேஹம் கான் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.