உலகின் பரவலான சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக், உலகின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென சிறிது நேரம் செயல்பாட்டினை இழந்தது. இது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும்.
பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர். பின்னர் சிறிது நேரம் கழித்து, ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பேஸ்புக் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். உங்களது காத்திருப்பிற்கு நன்றி’ எனும் குறுஞ்செய்தி அனைவருக்கும் கிடைத்துள்ளது.
இதேபோல் புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்ட்ராகிராமும் செயல்படவில்லை. லண்டன், அமெரிக்கா, இந்தியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள் அதிக அளவில் பேஸ்புக்கினை பயன்படுத்துகின்றனர். இதுவரை பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இதன் பின்னர் , பேஸ்புக் கணக்கின் உள்ளே சென்று, புதிய பதிவுகள் ஏதும் செயல்படாமல் பழைய பதிவுகளே தொடந்து பார்வைப்படுத்தப்பட்டதாக சிலர் கூறியுள்ளனர்.
தொழில்நுட்ப உலகில் 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது வலைத்தள முடக்கம் இதுவாகும். முன்னதாக இன்று அதிகாலை கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரைவ், ஹங் அவுட் போன்ற தளங்கள் சிறிது நேரம் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.