web log free
March 29, 2024

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்லஸ் சர்கோசிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

சர்கோசி 2012 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக சட்டவிரோதமான முறையில் பெரும் தொகை பணத்தை பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

66 வயதான சர்கோசிக்கு பாரீஸ் நகரில் நேற்று கூடிய நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது. எனினும் தான் எந்த தவறும் செய்யவில்லை என சரதொடர்ந்தும் கூறி வருகிறார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது அவர் தனது சட்டத்தரணிகள் மூலம் இதனை நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக சர்கோசி கூறியுள்ளார்.

ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், சர்க்கோசி சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. அவர் முன்னாள் ஜனாதிபதியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அவரது தண்டனை வீட்டுக்காவல் தண்டனையாக மாற்றப்படும்.

சர்க்கோசியின் காலில் மின்னணு வளையம் (காப்பு) இணைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வளையத்தின் இருப்பிடம் அடையாளம் காணப்படும். அதனடிப்படையில் சர்கோசி வீட்டில் இருக்கிறாரா என்பதை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அறிய முடியும்.

சர்க்கோசி வீட்டை விட்டு ஒரு அடி வெளியேறினாலும் அது குறித்து பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை சமிக்ஞை கிடைக்கும்.வளையத்தை கழற்ற வாய்ப்பில்லை. அதனை கழற்ற முயன்றால், பாதுகாப்பு படையினருக்கு சமிக்ஞை கிடைக்கும்.

2012 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சர்கோசி தனது ஜனாதிபதி பிரசாரத்திற்காக 22.5 மில்லியன் யூரோக்களை செலவிட்டார். இது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயன்படுத்தக்கூடிய சராசரி தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

சர்க்கோசி முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 2012 ஆம் ஆண்டு அவர் நிறைய பணம் செலவழித்து தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க முயற்சித்துள்ளார். எனினும் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரான்சுவா ஹோலாண்ட் வெற்றி பெற்றார்.