கனடா -விக்டோரியா கடற்கரையில் சரக்குக் கப்பலில் பயங்கர தீ பரவல்!
கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் விக்டோரியா கடற்கரையில் சரக்குக் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
உள்நாட்டு நேரப்படி நேற்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்ட நிலையில் கப்பலில் தீ பரவல் தொடர்ந்து நீடித்துள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கண்காணித்து வருவதாகவும், நிலைமையை மதிப்பிடுவதற்கு அமெரிக்க கடலோர காவல்படையுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கனேடிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கனேடிய இராணுவத்தினர் விமானங்களுடன் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். மேலும் கடலில் கலந்துள்ள ஆபத்தான இராசாயனங்களைப் பாதுகாப்பாக பிரித்தெடுப்பதற்கான நிபுணர் குழுக்களும் அங்கு விரைந்துள்ளன.
தீப்பற்றி எரிந்துவரும் கப்பலில் இருந்த 16 பணியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தீப்பற்றி எரிந்துவரும் கப்பலில் இருந்து கொள்கலன்கள் கடலில் விழும் காட்சிகள் சா்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கப்பலில் இருந்து 40 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை ருவிட்டரில் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலில் 52,000 கிலோவுக்கும் அதிகமான சுரங்கத் தொழிலில் பயன்படுத்தப்படும் சாந்தேட்ஸ் (xanthates) உள்ளிட்ட இரசாயனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை கடல் நீருடன் கலப்பதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எம்.வி. ஜிம் கிங்ஸ்டன் ( MV Zim Kingston) என்ற தீப்பற்றி எரியும் கப்பல் வெள்ளிக்கிழமை ஜுவான் டி ஃபுகா ( Juan de Fuca) ஜலசந்திக்கு மேற்கே மோசமான காலநிலையை எதிர்கொண்டதாக அறிவித்த நிலையில் சனிக்கிழமை விக்டோறியா அருகே தீப்பிடித்து எரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.