கொள்ளை நோயான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் இலக்கை நிர்ணயித்து தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு சில நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம், ஊசியால் ஏற்படும் அலர்ஜி உள்ளிட்டவைகளால் பலரும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
அதற்கு தீர்வு காணும் வகையில், கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு முதல் நாடாக பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.
Merck, Ridgeback Biotherapeutics ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள அந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரிசோதனையில் கிருமித்தொற்று உறுதியான உடனே அல்லது கிருமித்தொற்று அறிகுறி தென்பட்ட 5 நாளுக்குள் அந்த மாத்திரையை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் அந்த மாத்திரை Lagevrio என்ற பெயரில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயமுடையோர், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான அல்லது இறந்துபோகும் சாத்தியத்தை, அந்த மாத்திரை பாதியாகக் குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரையை பெற சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகள் அவற்றைப் பெற முன்பதிவு செய்துள்ளன.
Influenza வுக்காக உருவாக்கப்பட்ட Molnupiravir என்றழைக்கப்படும் அந்த மாத்திரை, Lethal mutagenesis எனும் செயல்பாட்டின் மூலம் கொரோனா கிருமிகள் உடலில் மீண்டும் உருவாவதைத் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்திரையை உட்கொள்வோருக்குப் பெருமளவில் பக்கவிளைவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் மாத்திரைத் தொகுதிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பல நாடுகள் முன்பதிவு செய்திருப்பதால், அடுத்த ஆண்டு மேலும் அதிகமான மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது.