web log free
May 18, 2024

அரைஞாண் கயிற்றின் மருத்துவம்

இன்றைய குழந்தைகள் நல மருத்துவமனைகளில் குழந்தையின் எடையை அறிய பல கருவிகள் உள்ளன. ஆனால் நம் முன்னோர்கள் குழந்தை வளர வளர அதன் எடையில் ஏற்படும் மாற்றங்களையும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கின்றதா என்பதையும் அந்தகாலத்தில் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை வைத்து தான் அளந்தார்கள்.

தமிழனின் அரைஞாண் கயிற்றின் பின் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையோடு இணைந்து விஞ்ஞான ரீதியாக நம் முன்னோர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இடுப்பின் நடுவே கட்டப்படும் அரைஞாண் கயிறு நாளாக நாளாக இறுகி இறுக்கமாகிக் கொண்டு போனால் குழந்தையின் எடை அதிகரிக்கிறது என்றும், அரைஞாண் கயிறு தளர்ந்து இடுப்பில் இருந்து கழன்று கால் வழியாக கீழே விழும் நிலை வந்தால் குழந்தை மெலிந்து எடை குறைந்து கொண்டிருக்கிறது என்றும் கணித்தார்கள் தமிழர்கள்.

மேலும் கிராமப்புறங்களில் நீச்சல் கற்றுத் தர அரைஞாண் கயிற்றில் சேலை அல்லது வேட்டியை கட்டி முடிச்சிட்டு அதன் மூலம் நீச்சல் பழகிக் கொடுத்தார்கள். நீரில் மூழ்கும் வாய்ப்பிருந்தால் மறு முனையை பற்றி வெளியில் இழுக்க அன்று அரைஞாண் கயிறு உதவியது.

இன்று இடுப்பில் கட்டப்படும் பெல்ட் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்த காலத்தில் மனிதனின் முக்கிய அரை ஆடையாக இருந்த கோவளம் இடுப்பில் இருந்து நழுவாமல் இருக்க அரைஞாண் கயிறு பயன்பட்டது.

இதையெல்லாம் விட முக்கியமாக வயல்வெளியில் வேலை செய்பவர்களை சில சமயங்களில் பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டத்தில் விஷம் கலந்து உடல் முழுவதும் பரவுவதை தடுக்க பாம்பு கடித்த இடத்திற்கு அருகில் கட்டுப்போட கயிறு தேவைப்படும். அப்போது இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றை அறுத்து காலுலோ கையிலோ கட்டிக்கொண்டு அடுத்த கட்ட மருத்துவ சிகிச்சையை ஆரம்பிக்க அரைஞாண் கயிறு உதவியது.

ஆகவே உயிர் காக்கும் ஒன்றாகவும் மானம் காக்கும் ஒன்றாகவும் அரைஞாண் கயிறு இருந்துள்ளது.

அரைஞாண் கயிறு இன்றைய தலைமுறையினருக்கு தலையாய பிரச்சினைக்கு தீர்க்க வழிவகுக்கிறது. அது என்னவென்றால், அதீத உடல் பருமன் பிரச்சினை. இதையும் தீர்த்து வைக்க தயாராக இருக்கிறது அரைஞாண் கயிறு. இடுப்பில் கட்டப்படும் கயிறு இருக்கமாகி அழுத்தும் போது நமது உடல் எடை வழக்கத்தை விட கூடுகிறது என்பதை நாம் உணர்கிறோம். பெரிதாக உபாதைகள் இல்லாத வரை உடல் பருமனால் பிரச்சினை இல்லை. ஆனால் மத்திய உடல் பருமன் எனக் கூறப்படும் வயிற்றுப் பருமனால் உடலில் இடுப்பு பகுதியை சுற்றி கொழுப்பு படிவதால் இதய சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். இந்த பிரச்சனை இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களின் வேலைக்கு இடையூறு செய்வதால் இரத்த அழுத்தத்தில் மாறுதல் ஏற்பட்டு உடலில் குறைபாடு ஏற்படுகிறது. அரைஞாண் கயிறு அணியும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் பிரச்சினை வரும் முன்னே எச்சரிக்கை அடையலாம் என ஒரு மருத்துவ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆயிரம் வந்தாலும் சரி அருணாகயிறு அந்தாலும் சரி என்பது ஒரு தமிழ் பழமொழி. 70 , 80 களில் இது ஒரு வழக்கு பழமொழியாக இருந்தது. இது வெறும் பழமொழி மட்டும் அல்ல தமிழனின் மருத்துவ மொழி என்பது இனி அறிந்துக் கொள்ளலாம்.

இத்தனை பயன்பாடுகள் இருக்கிறதென்றால் இதை ஒரு மத ரீதியாகவோ அல்லது சம்பிரதாய ரீதியாகவோ மட்டும் அணுகி அதை ஒரு மூடநம்பிக்கை என்று புறம் தள்ளாமல் ஆண் பெண் பேதமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு அணியும் பழக்கத்தை இனி ஏற்படுத்திக் கொள்வது ஆரோக்கியமே.

இன்று குழந்தை பிறந்த உடன் தொப்புள் கொடி என்னும் கலத்தை சேமித்து வைக்க கலம் சேமிப்பு வங்கிகள் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறது. இந்த தொப்புள் கொடியானது குழந்தை வளர்ந்தவுடன் ஏற்படும் நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க உதவுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் தொப்புள் கொடியை காயவைத்து பொடி செய்து அரைஞாண் கயிற்றில் அடைத்து வைத்து குழந்தைக்கு மாட்டிவிட்டார்கள். இது குழந்தைகளின் எதிர்காலத்தில் வரும் நோயிலிருந்து பாதுகாக்கும் என்று முன்னோர்கள் சொல்வதுண்டு. ஆனால் இந்த கூற்றை இன்றைய மருத்துவர்கள் அதற்கு வாய்ப்பில்லை எனவும் அதனை பொடியாக்கும் போதே கலங்கள் இறந்துவிடுகின்றன எனவும் இது பயனற்றது எனவும் கூறுகின்றனர். பயனில்லாத எந்த செயலையும் நம் முன்னோர்கள் செய்வதில்லை. அது போல இந்த தொப்புள் கொடியை பொடியாக்கி இதை தாயத்திலும் அரைஞாண் கயிற்றிலும் கட்டியதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்.

Last modified on Tuesday, 16 November 2021 08:26