அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் தேதி ஷெரீபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி, நவாஸ் சார்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நவாஸுக்கு 6 வாரங்கள் பிணை வழங்குவதாக அறிவித்தது.
இதையடுத்து, ஏறத்தாழ 3 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் நவாஸ் ஷெரீப் வெளியே வந்தார். நவாஸ் ஷெரீப்பை வரவேற்க அவரது கட்சியினர் சிறைவாசலில் பெருமளவில் திரண்டனர்.
அவர் சென்ற கார் மீது பூக்களை வீசி உற்சாக வரவேற்பை ஆதரவாளர்கள் அளித்தனர். சிறையில் இருந்து நவாஸ் ஷெரீப் இல்லம் வரை, காரின் பின்னால் அணிவகுத்தபடி ஏராளமான ஆதரவாளர்கள் பின் தொடர்ந்து சென்றனர்.