web log free
November 22, 2024

சமூக சீர்கேடுகளுக்கு மதமொரு காரணமில்லை

"சமூக சீர்கேடுகளுக்கு மதமொரு காரணமில்லை" 

உலகில் தொடரும் சமூக சீர்கோடுகளுக்கு மதம் தான் கரணம் என்னும் எண்ணம் அனைத்து மக்களிடையும் ஆழமாக பதிந்துள்ளது. அந்த எண்ணம் தவறு எண்ணத்தை உணர்த்தும் கட்டுரை உங்களுக்காக, 

பகிருங்கள் (Share this post)

மனிதர்களிடம் பொதுவாக அறிவும், மனிதநேயமும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் மிகுந்திருக்கும். படைப்பினங்களில் சிறந்ததாக மனிதன் இருப்பதற்கு அதுதான் காரணமாக இருக்கிறது. ஆனால் வெறுப்பை திட்டமிட்டு விதைக்கின்றபோது மேற்குறிப்பிட்ட மனிதனின் அனைத்து தன்மைகளும் அவனது மனதிலிருந்து அழிக்கப்பட்டு விடும். அதனால்தான் சகோதரத்துடன் வாழ வேண்டியவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள்.

 
“நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்க மாட்டார். அவ்வாறே வெறுப்பவர்கள் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தை வெளிப்படுத்தவும் மாட்டார்” என்று வெறுப்பதிலும், நேசிப்பதிலும் நியாயமான அணுகுமுறைகளை மேற்கொள்ள இஸ்லாம் வழிகாட்டுகிறது.
 
அடிப்படையற்ற கோபம்தான் வெறுப்பின் மூலம் மக்களை துண்டாடி வருகிறது. அது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி செல்கிறது. ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தின் மீது கடுமையாக நடந்து கொள்வதற்கு அவர்கள் பின்பற்றும் மதம் ஒருபோதும் காரணமாக இருந்தது இல்லை; இருப்பதும் இல்லை.
 
மதத்தை தீவிரமாக பின்பற்றுவதாக காட்டிக் கொள்ளும் சில கயவர்களே காரணமாக இருக்கிறார்கள். ஏனென்றால் அனைத்து மதங்களும் நல்லவைகளை மட்டுமே சொல்கின்றன. அவை களுடைய வார்த்தைகளில் எந்த தவறானவற்றையும் காணமுடியாது.
 
வெறுப்பிற்கு பின்னிருக்கும் காரணிகளாக பொய்கள், திரித்தல்கள், உளறல்கள், அவதூறுகள் ஆகியவையே இருக்கின்றன. அவற்றை மனதில் போட்டு குழப்பி விடுவதின் மூலம் தேவையற்ற அச்சம் பிறக்கிறது. அந்த அச்சம்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் அச்சாணியாக இருக்கின்றது.
 
“பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரை ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள். ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். அனைவரும் சகோதரர்களாக இருங்கள்” என்று நபிகள் நாயகம் மனித சமூகத்திற்கு அறிவிக்கின்றார்கள்.
 
பிறர் மீது கெட்ட எண்ணம் ஏற்படுவதற்கு முதற்காரணம் நம்பிக்கையற்ற தன்மை நிலைக்கொண்டிருப்பதாகும். முதலில் அனைவரும் சகோதரர்கள்; முடிவிலும் அதுவே. அவன் என் சகோதரன் என்ற எண்ணத்தை உள்ளத்தில் ஏற்படுத்திக் கொண்டால் வெறுப்பை விதைக்க நடைபெறும் முயற்சிகள் எந்நாளும் வெற்றிபெறாது.
 
வெறுப்பு விஷம் போன்றது. அது எல்லோரையும் கொன்றுவிடும். வெறுப்பை விதைப்பவர்கள் தனக்கும், தன் சமூகத்திற்கும் சேர்த்தே தீங்கிழைக்கிறார்கள் என்பதை முதலில் உணர வேண்டியது அவசியம். வெறுப்புகள் நம்மிடம் உள்ள மனித தன்மையை அழித்துவிடும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திடல் வேண்டும்.
 
“பரஸ்பர ஆதரவையும், நன்மதிப்பையும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்” என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு அல்லது ஒரு சமூகம் மற்றொரு சமூகத்திற்கு துயரமான காலங்களில் துணை நின்று ஆதரவு தந்தால் பெரும் மதிப்பு பெறுவதற்கு அது துணை நிற்கும். ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டால் வெறுப்பு என்கிற நெருப்பு தீப்பற்றாது. நெருப்பை விதைத்து பிரித்தாள நினைப்பவர்களும் தனிமைப்பட்டு போவார்கள்.

 

கட்டுரை:

மலையக மைந்தன்:சிவா.
இஸ்பிரிங்வெளி(மேமலை) பதுளை.
Last modified on Monday, 29 November 2021 07:05
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd