web log free
April 18, 2024

பெண் எந்திரங்கள்..

மகாராட்டிரத்தில் விவசாய கூலி வேலைக்கு செல்லும் கிராம பெண்கள், மாதவிடாய் நாட்களில் வேலைக்கு செல்ல முடியாமல் சம்பளம் இழப்பு, அபராதம் கட்ட நேரிடுவதால் இளம் வயதிலேயே கருப்பையை அகற்றிவிடும் அவலம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக இருக்கும் இந்த ஏழை பெண்கள் தங்கள் கருப்பையை நீக்க ஒப்பந்ததாரர்கள் முன்பணம் கொடுப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.  

2-3 குழந்தைகள் பெற்ற பிறகு கருப்பையை அகற்றுவது சாதரணம் என்று கூறப்பட்டாலும், கருப்பை அகற்றுவதால் ஏற்படும் ஆர்மோன் பிரச்சினை,

எலும்புத் தேய்மானம், மூட்டு தேய்ந்து போதல் போன்ற பிரச்சினைகள் பற்றி அவர்கள் அறியவில்லை. இந்த பெண்களின் வாழ்க்கை மிக விரைவில் முடங்கி போகும் அபாயமுள்ளது.

மருத்துவ உலகமும் ஒப்பந்ததாரர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சட்டவிரோதமாக கருப்பை அகற்ற அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றனர் என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியானது. 

மேலும் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் ஓய்வு எதுவும் இல்லாமல் எப்போதும் வேலை வேலை என்று இவர்களை முதலாளிகள் தங்கள் கரும்புகளுடன் சக்கையாக பிழிந்து எடுக்கிறார்கள்.

இந்த பெண்களின் கணவர்களும் மனைவியின் வேலை, கூலி எவ்விதத்திலும் தடைபடக்கூடாது என்று இந்த அவலத்தை ஆதரிக்கிறார்கள்.

கல்வி விழிப்புணர்வு இல்லாத பெண்களை வெறும் வேலை செய்யும் எந்திரங்களாக மாற்றும் இத்தகைய செயல்களை கண்டிப்பது நம் அனைவரின் பொறுப்பல்லவா? இதை தத்து நிறுத்த நாம் தானே குரல் கொடுக்க வேண்டும்?