இலங்கைக்கு 18,090 ரூபா கோடி கடன் வழங்கும் இந்திய அரசு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.
மத்திய அரசின் இம்முடிவு ராஜதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, இப்போது கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் இலங்கை அரசு, இந்தியாவிடம் கடனுதவியை கோரியது.
இலங்கை நிதியமைச்சரும், அதிபர் கோத்தபாயா ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே டெல்லிக்கு வந்து கடனுதவி கோரியதைத் தொடர்ந்து ரூ.18,090 கோடி மதிப்பிலான கடன் வசதித் திட்டத்தை இலங்கைக்கு இந்தியா அறிவித்திருக்கிறது.