web log free
January 03, 2025

மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு ராமேஸ்வரத்திலிருந்து எதிர்ப்பு

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட இலங்கை அரசு வசமிருந்த தமிழக மீன்பிடி படகுகளை ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்காகத் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்கரை மாவட்டங்களான நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பலர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் அரசுடைமையாக்கப்பட்ட 125 மீன்பிடி படகுகள் மற்றும் 17 நாட்டுப்படகு காரை நகர், காங்கேசன்துறை, மயிலட்டி, தலைமன்னார் உள்ளிட்ட கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு இலங்கை வசமிருந்த தமிழக மீன்பிடி படகுகளை வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அந்தந்த கடற்படை முகாம்களில் படகுகளை ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்ததது.

இலங்கை அரசின் இந்த அறிவிப்பிற்குத் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் இன்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக மீனவர்களின் 105 படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் உள்ள படகுகளுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்குவது போல் மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மீனவர்கள் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd