நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு எதிரொலியாக அல்ஜீரியா ஜனாதிபதி அப்தெலாசிஸ் பவுடேபிலிகா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டில் 4ஆவது முறையாக பதவியில் இருக்கும் அப்தெலாசிஸ் பவுடேபிலிகா , 5ஆவது முறையாக மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமிட்டார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
அல்ஜீரியாவில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீண்டும் போட்டியிடும் திட்டத்தை திரும்ப பெற்ற அப்தெலாசிஸ், வருகிற 18ஆம் திகதி நடைபெற வேண்டிய தேர்தலை தள்ளிவைத்தார். எனினும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
இதைத்தொடர்ந்து அல்ஜீரிய இராணுவ தளபதி அகமது கெய்த் சலா, சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்து பேசினார். அப்போது நாட்டில் அரசியல் சாசனத்தின் 102-வது பிரிவை அமல்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக நாட்டில் ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கவும், நாட்டை நிர்வகிக்க அரசியல்சாசன குழு ஒன்றை அமைக்கவும் இந்த பிரிவு வழி வகுக்கிறது.
அந்த அடிப்படையில் ஜனாதிபதி அப்தெலாசிஸ் புதிய மந்திரி சபையை அமைத்தார். இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி பதவியில் இருந்து அப்தெலாசிஸ் பவுடேபிலிகா ராஜினாமா செய்துள்ளார்.
அப்தெலாசிஸ் பவுடேலிகா பதவி விலகுவதாக அறிவித்ததும், ஏராளமான பொதுமக்கள் அதை கொண்டாடும் வகையில், காரில் ஒலிப்பான்களை எழுப்பினர்.
அல்ஜீரியா அரசியல் அமைப்பு படி, ஜனாதிபதி பதவி விலகிவிட்டால், நாடாளுமன்ற மேலவையின் சபாநாயகர் 90 நாட்கள் இடைக்கால தலைவராக இருப்பார். இந்த 90 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.