கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை வெளியிட்டுள்ள அவர், தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை, நலமாக இருப்பதாகவும், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக தனது பணிகளை கவனிப்பதாகவும் கூறி உள்ளார். மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
கொரோனா பாதிப்பு உள்ள தனது குழந்தையுடன் தொடர்பில் இருந்ததால் 5 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக வியாழக்கிழமை ஜஸ்டின் கூறியிருந்தார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பாசிட்டிவ் என வந்துள்ளது. இதற்கு முன்பு, ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோதும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். தடுப்பூசி செலுத்துதல், முக கவசம் அணிதல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒட்டாவில் கடந்த வார இறுதியில் டிரக் ஓட்டுநர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.