web log free
April 20, 2024

இந்திய பெண் பத்திரிகையாளர்களின் முயற்சி

இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட செய்தி விவாத நிகழ்ச்சிகள் முரட்டுத்தனமாக உள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சிக் காலத்தில் நாம் இருக்கிறோம். இதில் செய்திச் சேனல்களுக்குப் பஞ்சமில்லை. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான செய்தி தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. அவற்றில் சில சேனல்கள் பகிரங்கமாகவே அரசியல் சார்பு கொண்டவையாகவும், சில அரசியல் கட்சிகளால் நடத்தப்படுபவையாகவும் உள்ளன. சில நடுநிலையாக இயங்குவதாகக் கூறிக் கொள்கின்றன. எந்த மாதிரியான நிலைப்பாடும் என்றாலும் செய்திச் சேனல் என்றால் அதில் ‘டாக் ஷோ’ விவாத நிகழ்ச்சிகள் பிரதான நிகழ்ச்சியாக உள்ளன.

அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றி Network of Women in Media, India (NWMI) இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு ஓர் ஆய்வு மேற்கொண்டது. இதற்காக ஆங்கிலம் உட்பட 12 மொழிகள் சார்ந்த 31 ப்ரைம்டைம் சேனல்களின் நிகழ்ச்சிகள் அதுவும் குறிப்பாக செய்தி சார்ந்த விவாத நிகழ்ச்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அந்த ஆய்வின்படி 50% செய்தி சார்ந்த நிகழ்ச்சிகளும், 85% விவாத நிகழ்ச்சிகளும் முரட்டுத்தன்மை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு செய்தி சார்பு அடிப்படையில் எடுக்கப்படவில்லை. மாறாக நிகழ்ச்சியைத் தாங்கும் நிருபர் அல்லது நெறியாளரின் செயல்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முரட்டுத்தன்மையை வெளிப்படுத்துவதில் குரல் 76.76% பங்களிக்கிறது. ஒலி மற்றும் ஒளி எஃபெக்ட்ஸ் 60% பங்களிக்கிறது. முரட்டுத்தனமான அதிகார தொனியில் உள்ள குரல் கொண்ட ஆண் நெறியாளர்கள் 78.13%. இது இதே தன்மை கொண்ட பெண் நெறியாளர்களைவிட இந்த எண்ணிக்கை சற்றுதான் அதிகம். குரல் அடிப்படையில் முரட்டுத்தன்மையை வெளிப்படுத்தும் பெண்களின் சதவீதம் 75.28% ஆக உள்ளது.

அதேபோல் ஆண் நெறியாளர் தலைமையேற்று நடத்தும் விவாதக் குழு அதிக முரட்டுத்தனமான போக்கைக் காட்டுவதாகவும் (54.55%), பெண் நெறியாளர்கள் ஏற்று நடத்தும் நிகழ்ச்சிகளின் முரட்டுத்தன்மை (12.07%) ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதத்தில் பங்கேற்போர் ஒருவருக்கொருவர் சாடிக் கொள்வதும் ஆண் நெறியாளர்கள் தலைமையிலான நிகழ்ச்சிகளில் அதிகம் உள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 48.75%. இதுவே பெண் தலைமையிலான நிகழ்ச்சியில் 15.52% ஆக உள்ளது.

இதனால், News Broadcasters Association செய்தி ஒலிப்பரப்பாளர்கள் கூட்டமைப்போ அல்லது பிற ஊடக அமைப்புகளோ தலையிட்டு செய்திகளை, செய்தி விவாத நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்காக எடிட்டோரியல் ஹேண்ட்புக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் பரந்துபட்ட துறைகள் சார்ந்தவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாலினம், சாதி, சமூகம், தொழில், இடம், இயலாமை எனப் பல்வேறு விதத்திலும் காலங்காலமாக ஒடுக்கப்படுவோரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விவாதக் குழுக்கள் இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளில் ஆணாதிக்க தொனி மேலோங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.