மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்.ஐ.டி. பவுண்டேஷன், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், டி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பினாய் விஸ்வம் கணவர் மனைவியிடம் சம்மதம் இன்றி கட்டாய உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமா என்ற கோணத்தில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-
இந்த நாட்டில் நடக்கிற ஒவ்வொரு திருமணத்தையும், வன்முறை திருமணம் என்று கண்டிக்க வேண்டியதில்லை. அதே போல இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பவர் என்று கருதுவதும் நல்லதல்ல.
தற்போது இதுகுறித்த வழக்கு ஒன்று நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. அதனால் இதுகுறித்து விரிவாக விவாதிப்பதற்கு மாநிலங்களவை விதி எண்.47 அனுமதிக்காது.
மாநில அரசுகளுடன் இணைந்து பெண்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இலவச உதவி எண்கள் செயல்பட்டு வருகின்றன. அவை 66 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உதவி உள்ளன. தவிரவும், செயல்பட்டு வரும் 703 ‘ஒன் ஸ்டாப்’ மையங்களும் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு உதவி பெற்றிருக்கின்றனர்.
நமது நாட்டில் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பது அனைவரின் முன்னுரிமை ஆகும்.
இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி. சுஷில் மோடி,“வலுக்கட்டாயமாக கணவன், மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதை தண்டிக்கத்தக்க கிரிமினல் குற்றமாக அரசு அறிவிக்க ஆதரவாக உள்ளதா? இதன்மூலம் திருமணம் என்ற நிகழ்வே முடிவுக்கு வந்துவிடும்” என மற்றொரு கேள்வியையும் எழுப்பினார்.
இந்த வழக்கு நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளதால் பதில் அளிக்க முடியாது எனவும், 2017-ல் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “திருமண பாலியல் வன்கொடுமை குறித்த எந்த ஒரு சட்டமும் வரையறுக்கபடவில்லை, மேற்கத்திய நாடுகளில் இது குற்றமென குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தியாவும் இதை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டத்தை ஆண்களுக்கு எதிராக உபயோகபடுத்தும் அபாயமுள்ளது” என கூறியிருப்பதை குறிப்பிட்டார்.