web log free
December 21, 2024

உயிர் தப்பி ஓடுமாறு ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை

 

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 5300-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. ரஷிய ராணுவத்தின் 191 பீரங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர 816 கவச வாகனங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும், ரஷிய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், உக்ரைனில் உள்ள ரஷிய வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியதுடன், ‘உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என எச்சரித்துள்ளார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவுக்கு எதிரான போரில் சண்டையிட விரும்பினால் ராணுவ அனுபவம் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் நாட்டை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd