ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் நேற்று இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூவர் பலியானதுடன், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இடம்பெறும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
நங்கர்ஹார் மாகாணத்தில் 2015ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் காணப்படுவதுடன், பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அவர்கள் அங்கு நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகளால் ஜலாலாபாத் நகரம் அதிர்ந்ததுடன், இவற்றில் சிக்கி 3 பேர் உயிரிழந்தாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு சென்றதுடன், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகளுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.